தமிழகம்

இந்தி கற்பதில் தமிழகம் முதலிடம்: நடப்பாண்டில் 3.54 லட்சம் பேர் ஆர்வம்

செய்திப்பிரிவு

சென்னை: தென்னிந்திய மாநிலங்களில் தமிழகத்தில் இருந்துதான் அதிகளவிலான நபர்கள் இந்தி மொழியை கற்றுக் கொள்வதாக இந்தி பிரச்சார சபா தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை (தமிழ், ஆங்கிலம்) பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தி திணிப்புக்கு பரவலாக எதிர்ப்பு இருந்தாலும், விருப்பப்பட்டு அதை கற்றுக் கொள்பவர்களுக்கு தடை ஏதுமில்லை. அதனால் தமிழ கத்தில் இந்தியை படிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. தென்னிந்தியாவில் இந்தியை அதிகம் படிக்கக்கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே தட்சிண பாரத் இந்தி பிரச்சார சபாவின் மூலம் இந்தி படிக்க விரும்புபவர்களுக்கு பயிற்சி அளித்து தேர்வு நடத்தப்படுகிறது. இந்தி மொழியில் தேர்ச்சி பெற மொத்தம் 8 தேர்வுகளை எழுத வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒவ்வொரு நிலைக்கேற்ப சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகளை இந்தி பிரச்சார சபா ஆண்டுக்கு 2 முறை நடத்துகிறது. அந்தவகையில் நடப்பாண்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து 4 லட்சத்து 73,650 பேர் இந்தி தேர்வை எழுதியுள்ளனர்.

இவர்களில் தமிழகத்தில் இருந்து மட்டும் 3 லட்சத்து 54,655 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். இதேபோல், ஆந்திராவில் ஒரு லட்சத்து 4,959 பேர், கர்நாடகாவில் 5,584 பேர், கேரளாவில் 8,452 பேர் தேர்வு எழுதியுள்ளனர். மேலும், தமிழத்தில் இருந்து இந்தி கற்க விரும்புபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்தது 5 சதவீதம் வரை உயர்ந்து வருவதாக அத்துறையின் வல்லுநர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT