படம்: டி.செல்வகுமார் 
தமிழகம்

சென்னை: மழைநீர் தேங்குவதை தடுக்க மிஷின் ஹோல்களில் துளையிட்டு நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னையில் புதிய கழிவுநீர் குழாய்கள் அமைப்பதற்கு முன்பாக மனித நுழைவு வாயிலுக்கு பதிலாக தூர்வாருவதற்கு வசதியான இயந்திர நுழைவுவாயில் தெருக்களில் ஆங்காங்கே கான்கிரீட் கலவை இயந்திரம் மூலம் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

சூளைமேடு திருவள்ளுவர்புரம் 2-வது தெருவின் ஒரு பகுதியில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இயந்திர நுழைவுவாயில்கள் பெரிய தூண்கள்போல நிற்கின்றன. சென்னையில் அவ்வப்போது மழை பெய்யும்போது இந்த இயந்திர நுழைவுவாயில்களில் மழைநீர் தேங்கி டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக `இந்து தமிழ் திசை' நாளிதழில் `ரெடிமேட் மிஷின்ஹோல்களில் மழைநீர் தேங்கி டெங்கு பரவும் அபாயம்' என்றதலைப்பில் கடந்த 14-ம் தேதி செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக சூளைமேடு திருவள்ளுவர்புரம் 2-வது தெருவில் உள்ள இயந்திர நுழைவு வாயில்களில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்றுவதற்காகவும் மீண்டும் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காகவும் நேற்று முன்தினம், சென்னை குடிநீர் வாரியம், பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு, இயந்திர நுழைவுவாயில்களின் அடிப்பகுதியில் துளையிட்டு மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்தது.

இதன்காரணமாக இயந்திர நுழைவு வாயில்களில்தேங்கியிருந்த மழைநீர் முழுவதுமாக வெளியேறிவிட்டது. ஆனால், பிளாஸ்டிக் பாட்டில்கள், உடைந்து போன மரத்துண்டுகள் போன்ற குப்பைகள் இன்னும்இயந்திர நுழைவுவாயில்களில் இருந்து அகற்றப்படவில்லை. அவற்றையும் அகற்றி தூய்மையை பராமரிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT