புதுச்சேரி: மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் கட்சி செப்டம்பர் 3-ம் தேதி மின்துறை அலுவலகத்தை முற்றுகையிடவுள்ளதாக கட்சியின் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இண்டியா கூட்டணியிலுள்ள திமுக வரும் 2-ம் தேதி தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்துகிறது. அதே நாளில் மின்துறை அலுவலகம் முன்பு சிபிஐ, சிபிஎம், விசிக, சிபிஐ (எம்-எல்) கட்சியினர் கூட்டாக போராட்டம் நடத்துகின்றனர். இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்தனியாக போராட்டம் அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸும் தனித்து போராட்டத்தை இன்று அறிவித்துள்ளது.
புதுச்சேரி காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும், பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வைத்திலிங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் மின் கட்டணத்தை அரசு உயர்த்தியது. எதிர்ப்பால் அக்கட்டண உயர்வு நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது, மீண்டும் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அதே தேதியில் இருந்து அரியர்ஸ் உடன் வசூலிக்கப்படும் என்று மின்துறை அறிவித்துள்ளது.
அப்படியென்றால் முன்பு அமைச்சர் அறிவித்தது மோசடியா? அல்லது மின்துறை அதிகாரிகள் யாரும் அமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லையா? இதற்குக் காரணம் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தான் என்றால் தற்போதைய ஆட்சியாளர்கள் அனைவரும் அடுத்துவரும் தேர்தல்களில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம்தான் வாக்குச் சேகரிக்க வேண்டும். புதுச்சேரி மக்களிடம் வாக்குக் கேட்டு செல்லக்கூடாது. தனியாரிடம் ஒப்படைக்கும் முன்பு இஷ்டத்திற்கு மின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா?
சென்னை உயர் நீதிமன்றத்தில் மின்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் தொடர்ந்துள்ள வழக்கில் மின்துறையை தனியார் மயமாக்கமாட்டோம் என்று அரசு உறுதியளித்து அந்த வழக்கை முடிவிற்கு கொண்டுவர வேண்டும், அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 3-ம் தேதி காலை உப்பளத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.