சென்னை: சென்னையில் இருந்து பாங்காக் புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்டிருந்த இயந்திர கோளாறை விமானி சரியான நேரத்தில் கண்டுபிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 226 பயணிகள், 12 விமான சிப்பந்திகள் உட்பட 238 பேருடன் இன்று காலை புறப்பட தயாரானது. விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, விமானத்தை நிறுத்திய விமானி, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இழுவை வாகனம் மூலம் விமானம் இழுத்து வரப்பட்டு புறப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். பொறியாளர்கள் வந்து விமானத்தில் ஏற்பட்டிருந்த கோளாறை சரிசெய்தனர். பின்னர், விமானம் பாங்காக் புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை, விமானி சரியான நேரத்தில் கண்டுபிடித்ததால், பெரும் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.