கர்நாடகத்தை தொடர்ந்து தமிழகத்திலும் வேட்பாளர்களின் வீடுகளில் கண்காணிப்பு கேமரா வைக்கப்படுமா என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயல கத்தில் அவர், தேர்தல் பாதுகாப்பு உயர் போலீஸ் அதிகாரிகள் சேஷசாயி மற்றும் டி.கே.ராஜேந்திரன் ஆகியோரோடு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
அப்போது தேர்தல் ஏற்பாடுகள் பற்றி விவாதிக் கப்பட்டது. அதன்பிறகு நிருபர்களிடம் பிரவீண்குமார் கூறியது: கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க அவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் கண் காணிப்பு கேமரா பொருத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதுபோல் தமிழகத்திலும் வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் அதுபோல் வேட்பாளர்களின் வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான அவசியம் ஏற்படவில்லை.
இன்று நடைபெற்ற தேர்தல் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் பாதுகாப்புப் பணிகளுக்காக வரவிருக்கும் மத்திய படையினரை எப்படி, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது, எந்த தொகுதிகளுக்கு அதிக பாதுகாப்பு தேவை என்பன பற்றி விவாதிக்கப்பட்டது.
அம்மா குடிநீர் பாட்டில்களில் இரட்டை இலை சின்னம் பொறித்தே தயாரிக்கப்படுவது பற்றிய புகார் வந்துள்ளது. அதை மத்திய ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளோம் என்றார்.
131 பேர் மனுத்தாக்கல்
தமிழகத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான 2-ம் நாளான செவ்வாய்க்கிழமை, 131 பேர் மனு செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 198 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட செவ்வாய்க்கிழமை 3 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர் என்று பிரவீண்குமார் தெரிவித்தார்.