நாடாளுமன்ற தேர்தல் நாளன்று, தேர்தல் முறைகேடுகள் பற்றிய தகவல்களை நிருபர்களிடமிருந்து உடனுக்குடன் பெறுவதற்காக “வாட்ஸ் ஆப்”-ல் புதிய குழுவை (குரூப்) தேர்தல் துறை வியாழக் கிழமை உருவாக்கியது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
நாடாளுமன்ற தேர்தலை சிறப் பாக நடத்துவதற்காக தேர்தல் துறையினர் பல்வேறு முன்னேற் பாடுகளை செய்திருந்தனர். வாக் காளர்களை கவர்ந்திழுப்பதற்கா கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்தல் தொடர்பான புகார்களைப் பெறு வதற்காக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே இளைஞர் கள் மத்தியிலும், பெரும்பாலான செல்போன் உபயோகிப்பாளர் களிடமும் பிரபலமாகியுள்ள இலவச தகவல் பரிமாற்ற இணைய சேவையான “வாட்ஸ் ஆப்”-ல், வியாழக்கிழமை ஒரு புதிய குழுவை (குரூப்) தேர்தல் துறை திடீரென உருவாக்கியது.
“மீடியா” எனப் பெயரிடப்பட்ட அந் த குழுவில், தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரின் தொலைபேசியில் இருக்கும் செய்தியாளர்களின் எண்கள் உடனடியாக சேர்க்கப்பட்டன. இது குறித்து விசாரித்தபோது, நிருபர்களிடமிருந்து தேர்தல் தொடர்பான நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்காகவே அக்குழுவை உருவாக்கியது தெரியவந்தது.
அந்த குழுவில் காலை முதலே தமிழக வாக்குப்பதிவு நிலவரம் பற்றிய விவரம் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டது. தலைமை தேர்தல் அதிகாரி பல்வேறு பணிகளுக்கு நடுவிலும் வாட்ஸ் ஆப்-ல் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தபடி இருந்தார்.
நிருபர்களும், தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை அடிக்கடி அதில் பதிவு செய்தபடி இருந்தனர். இது தேர்தல் துறைக்கும் மிகவும் உபயோக மாக இருந்தது.