தமிழகம்

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் 1,300 பேர் பாதிப்பு; இளைஞர் உயிரிழப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரியில் நடப்பாண்டில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 1,300 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்தாண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஆயிரத்துக்குள் இருந்தது. தற்போது 1,300 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்த முகமது இர்பான் (22) என்ற இளைஞர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார்.

இவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 4 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முகமது இர்பான் உயிரிழந்தார். டெங்குவுக்கு புதுச்சேரியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, உதவி இயக்குநர் (தேசிய கொசு மற்றும் பூச்சுகளால் பரவும் நோய்த்தடுப்பு பிரிவு) முருகன் தெரிவித்ததாவது: கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஆயிரத்துக்குள் இருந்தது. நடப்பாண்டு ஜனவரி முதல் தற்போது வரை டெங்கு காய்ச்சலுக்கு 1,300 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். எல் நினோ பாதிப்பு காரணமாக டெங்கு காய்ச்சல் அதிகமாக இருக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருந்தது. பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சியின் காரணமாக ஓரளவு டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருந்தது.

இருப்பினும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எல்லோருடைய பங்களிப்பும், கூட்டு முயற்சியும் இருந்தால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும். கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிப்பதை பொருத்தே கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

வெளிப்படையான இடங்களில் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறையினர் கண்டறிந்து டெங்கு கொசுக்களை அழித்து வருகின்றனர். ஒவ்வொரு வீடுகளிலும் பயன்படுத்தப்படாத பாத்திரங்கள் உள்ளிட்டவைகளில் தண்ணீர் தேங்கி நின்றால் டெங்கு கொசு உற்பத்தியாகும். எனவே அவற்றை அகற்றினால் டெங்குவை ஒழிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT