அஸ்ரா கார்க்

 
தமிழகம்

தமிழகம் முழுவதும் 13 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: அஸ்ரா கார்க்குக்கு கூடுதல் பொறுப்பு

சென்னை உளவுப் பிரிவு இணை ஆணையராக சந்தோஷ் ஹடிமானி

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: தமிழகம் முழுவதும் 13 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், உளவுத் துறை ஐஜி அஸ்ரா கார்க்குக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக உள்துறை செயலர் கே.மணிவாசன் இன்று பிறப்பித்த உத்தரவு: தமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க், அத்துறையின் கூடுதல் டிஜிபி பணிகளையும் கூடுதலாக கவனிப்பார்.

மேலும், சென்னை பெருநகர காவல் தலைமையிடத்து கூடுதல் காவல் ஆணையராக இருந்த ஏ.ஜி.பாபு சேலம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பொறுப்பில் இருந்த கே.ஜோசி நிர்மல் குமார் டிஜிபி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் காவல் துறை நவீன மயமாக்கல் பிரிவு ஐஜி-யாக மாற்றப்பட்டுள்ளார்.

சேலம் சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமானி சென்னை காவல் துறை உளவுப் பிரிவு (நுண்ணறிவு) இணை ஆணையராகவும், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை டிஐஜி என்.தேவராணி சேலம் சரக டிஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பி வி.பத்ரி நாராயணன் அடையாறு துணை ஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி ஏ.சி.கார்த்திகேயன் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய எஸ்பியாகவும், சென்னை போதைப் பொருள் நுண்ணறிவுப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை எஸ்பி என்.மதிவாணன் பரங்கிமலை துணை ஆணையராகவும், அந்தப் பொறுப்பில் வி.ஆர்.சீனிவாசன் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை எஸ்பி-யாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய எஸ்பி-யாக இருந்த கே.ஸ்டாலின் சென்னை சிபிசிஐடி தென் மண்டல எஸ்பியாகவும், சென்னை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையர் பி.சுந்தரவடிவேல் சென்னை காவலர் நலன் துணை ஆணையராகவும், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் வி.பாஸ்கரன் சேலம் வடக்கு துணை ஆணையராகவும், அந்தப் பொறுப்பில் இருந்த அங்கித் சிங் வண்ணாரப்பேட்டை துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஆர்.ஸ்டாலின் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு வடக்கு மண்டல எஸ்பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உள்துறை செயலர் கே.மணிவாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

SCROLL FOR NEXT