தமிழகம்

மதுவுக்கு எதிராக போராட வேண்டும்: அனைத்து கட்சிகளுக்கு ஞானதேசிகன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

மதுவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று திரண்டு போராடும் நிலை வரவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் 71-வது பிறந்தநாள் விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில் புதன் கிழமை கொண்டாடப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசி கன், முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. ராணி மற்றும் பலர் ராஜீவ் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி உரிமை இல்லை என்று அறிவித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. எதிர்க்கட்சி என்றால் வெறும் எதிர்க்கட்சியாக செயல் படுவது மட்டுமில்லை. புதிய சட்டங்கள், மசோதாக்களை நிறைவேற்றும்போது கூட்டுக் கமிட்டி அமைக்க வேண்டும். இந்தக் கமிட்டியில் எதிர்க்கட்சிகள் இடம் பிடித்தால்தான் அரசியல் சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற முடியும். எனவே, எதிர்க்கட்சி உரிமை என்பது ஜனநாயகம் வகுத்துத் தந்த பாதையாகும்.

தமிழகத்தில் மது விற்பனையின் அளவை படிப்படியாகக் குறைக்க வேண்டும். மதுக் கடைகளை மூட வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தனித்தனியாக இல்லாமல், மதுவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராடும் நிலை வரவேண்டும்.

இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.

SCROLL FOR NEXT