தமிழகம்

ரயில் பயணக் கட்டண சலுகைக்கான மருத்துவப் படிவம் திடீர் மாற்றம்: மாற்றுத் திறனாளிகள் பாதிக்கப்படும் அபாயம்

டி.செல்வகுமார்

ரயில் பயணக் கட்டண சலுகைக்கான மருத்துவப் படிவத்தை இந்தியன் ரயில்வே திடீரென மாற்றியுள்ளதால் பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு வகையான மாற்றுத் திறனாளிகளும், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் ரயிலில் சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்யலாம். இந்த கட்டண சலுகை பெறுவதற்கு அரசு மருத்துவரின் சான்று அவசியம். இதற்கு முன்பு, உடல் ஊன முற்றோர், முதுகுத் தண்டுவடம் பாதித்ததால் இருகால்களும் செயலிழந்தவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், முழு பார்வை இழந்தவர்கள், முற்றிலுமாக காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதவர்கள் ஆகியோருக்கு தனித்தனி படிவத்தில் மருத்துவ சான்று வழங்கப்பட்டது.

அதுபோல புற்றுநோய், இதயநோய், தொழுநோய், காசநோய், எய்ட்ஸ், ஏபிளாஸ்டிக் அனிமியா போன்ற நோயாளிகளுக்கும் தனித்தனி படிவத்தில் மருத்துவ சான்று வழங்கப்பட்டது.

இந்த தனித்தனி படிவங்களை, ஒரே படிவமாக இந்தியன் ரயில்வே திடீரென மாற்றியதுடன், கடந்த 15-ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. பழைய படிவத்தில் சான்று வைத்திருப்பவர்கள் அதன் செல்லத்தக்க காலம் வரை அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், புதிய படிவம் அனைத்து ரயில் நிலையங்களிலும் கிடைக்கும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இருப்பினும், புதிய படிவத்தில் மருத்துவ சான்றினை உடனடியாக வாங்க முடியாமல் மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாவார்கள் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு துணைத் தலைவர் டி.எம்.என். தீபக் கூறுகையில், ‘‘ரயில்வேயின் புதிய உத்தரவால் மாற்றுத்திறனாளிகள் புதிய படிவத்தில் உடனடியாக மருத்துவச் சான்று வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் பாதிக்கும் அபாயம் இருப்பதால், அவர்களுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் ஆங்காங்கே உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களிலே புதிய படிவத்தில் மருத்துவ சான்று பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’என்றார்.

SCROLL FOR NEXT