சென்னை: 986 மருந்தாளுநர் பணியிடத்துக்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) 2022 ஆகஸ்டில் வெளியிட்டது. 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நவம்பரில் முடிந்தது. நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட காரணங்களால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணியிட ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், 986 பேருக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தில் (டிஎம்எஸ்) கலந்தாய்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
காலை 8 மணிக்கு தொடங்கிய கலந்தாய்வு மறுநாள் அதிகாலை 3 மணி வரைநடைபெற்றது. சுமார் 950 பேருக்குபணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிலர் சான்றிதழ்களை சமர்ப்பிக்காததால், அவர்களின் பணியிட ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கலந்தாய்வில் பங்கேற்ற சிலர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. ஆனால், சுமார் 1,000காலிப்பணியிடங்கள் மட்டும்தான் காண்பிக்கப்பட்டன. அதிலும்,600-க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில்தான் இருந்தது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் காலிப்பணியிடங்கள் பெரும்பாலும் சென்னையில் தான் காண்பிக்கப்பட்டன. மற்றஊர்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒருசில காலிப்பணியிடங்களே இருந்தன.
கலந்தாய்வில் பங்கேற்ற முதல்300 நபர்களுக்கு மட்டுமே அவர்கள் விரும்பிய இடம் கிடைத்தது. மற்றவர்களுக்கு 40, 50 கிமீ தொலைவிலும், அருகில் உள்ள மாவட்டங்களிலும்தான் இடங்கள் கிடைத்தன என்றனர்.