பல்வேறு அம்மா திட்டங்களைத் தொடர்ந்து முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் அம்மா மருத்துவக் காப்பீட்டு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காப்பீட்டுத் திட்டம் உள்ள மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரை எடுத்துவிட்டு அம்மா காப்பீட்டுத் திட்டம் என வைத்துக் கொள்ளுமாறு சுகாதாரத் துறையில் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் இல்லாமல் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், 2011 மே 16-ம் தேதி முதல் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயர் கொண்டு வரப்பட்டது. மருத்துவ சிகிச்சை முறைகளும் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பெயரில் செயல்பட்டு வந்த அத்திட்டத்தை, அம்மா மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என மாற்றிக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை சார்பில் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் மருத்துவமனைகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனைகளில் வைக்கப் பட்டுள்ள விளம்பரப் பலகைகளில் பெயர் மாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கோவையை சேர்ந்த சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இதற்கான உத்தரவு வந்தது. அனைத்து மருத்துவமனைகளும் பெயர் மாற்றி வைக்குமாறும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என பயன்படுத்தாமல் அம்மா மருத்துவக் காப்பீட்டு திட்டம் என கண்டிப்பாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளோம். ஆனால், சிகிச்சை திட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றார்.