தமிழகம்

டி.டி. மருத்துவக் கல்லூரியை தமிழக அரசே நடத்துவதுதான் நிரந்தர தீர்வு: டாக்டர்கள், பெற்றோர் கருத்து

செய்திப்பிரிவு

டி.டி. மருத்துவக் கல்லூரியை தமிழக அரசே ஏற்று நடத்துவது தான் மாணவர்களின் பிரச் சினைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என்று டாக்டர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் அருகேயுள்ள டி.டி. மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை இந்திய மருத்துவ கவுன்சில் 2011-12-ம் ஆண்டு ரத்து செய்தது. இதனால், பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் 216 பேர் கடந்த ஓராண்டு காலமாக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

கல்லூரி வளாகத்தில் உண்ணா விரதம், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்பு போராட்டம், ஆளுநர் மாளிகை முற்றுகை, அமைச்சர் வீட்டில் முற்றுகை, தலைமைச் செயலகத்தில் முற்றுகை என தொடர்ந்து அவர்களின் போராட்டம் நீள்கிறது.

மாற்று ஏற்பாடு

ஏற்கெனவே, 2010-11-ம் ஆண்டு அக்கல்லூரியில் சேர்ந்த மாணவ-மாணவிகள் 60 பேர் அரசு கல்லூரிகளில் சேர்க்கப் பட்டனர். தற்போது பாதிக்கப் பட்டிருப்பவர்கள் 2011-12-ம் ஆண்டிலும், 2012-13-ம் ஆண்டி லும் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தவர்கள்.

தங்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும். டி.டி. மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது பாதிக்கப் பட்ட மாணவர்களின் முக்கிய கோரிக்கை.

அரசு ஏற்று நடத்த வேண்டும்

216 பேர் இருப்பதால் அவர்கள் அனைவரையும் எப்படி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முடியும்? என்று அரசுத் தரப்பு யோசித்துக் கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியதாவது:

அத்தியாவசிய சான்றிதழ்

தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்போது, சம்பந்தப்பட்ட மாநில அரசு அத்தியாவசிய சான்றிதழ் என்ற உறுதிமொழிச் சான்றை மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் (எம்சிஐ) வழங்கும்.

குறிப்பிட்ட கல்லூரியில் உள்ள வசதிகளை ஆய்வு செய்து அனுமதி வழங்கலாம் என்றும், ஒருவேளை மாணவர்களின் படிப்புக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தாங்கள் அதற்குப் பொறுப்பேற்பதாக மாநில அரசு அதில் உறுதியளித்திருக்கும்.

இத்தகைய அத்தியாவசிய சான்றிதழை டி.டி. மருத்துவக் கல்லூரி அனுமதி விஷயத் திலும் தமிழக அரசு வழங்கியிருக்கிறது. எனவே, தற்போது மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டிருப்பதால் தமிழக அரசே அக்கல்லூரியை ஏற்று நடத்தலாம்.

தனிச்சட்டம் தேவை

அண்ணாமலை பல்கலைக்கழக விவகாரத்தில் தனி சட்டம் கொண்டுவந்ததைப் போல டி.டி. மருத்துவக்கல்லூரி விஷயத்திலும் தனிச்சட்டம் கொண்டுவந்து அரசே ஏற்று நடத்த முடியும். இதுதான் தற்போதைய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். இதற்கு முதல்வர் ஜெயலலிதா தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ரவீந்திரநாத் கூறினார்.

பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் படிப்பு தொடரும் வகையில் தமிழக அரசே டி.டி. மருத்துவக் கல்லூரியை ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

SCROLL FOR NEXT