ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சவுக்கு சங்கரை போலீஸார் அழைத்து சென்றனர்.  
தமிழகம்

சவுக்கு சங்கருக்கு திடீர் உடல்நல பாதிப்பு: ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

வி.சீனிவாசன்

சேலம்: யூடியூபர் சவுக்கு சங்கரை போலீஸார் சென்னைக்கு அழைத்து செல்லும் வழியில், வயிற்று வலி ஏற்பட்டதால் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது.

பெண் போலீஸாரை பற்றி அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில், யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். அதேபோல, நீலகிரி போலீஸாரும் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். சென்னை புழல் சிறையில் இருந்த சவுக்கு சங்கரை, உதகை குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, உதகை சைபர் கிரைம் போலீஸார், கடந்த 29-ம் தேதி அழைத்துச் சென்றனர். நீதிமன்ற விசாரணை முடிந்த நிலையில், சவுக்கு சங்கரை மீண்டும் சென்னைக்கு கொண்டு செல்ல உதகை போலீஸார் புறப்பட்டனர்.

உதகை சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் தலைமையில் 17 போலீஸார் சவுக்கு சங்கரை அழைத்துக் கொண்டு வந்தபோது, சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சவுக்கு சங்கர் திடீரென வயிறு வலிப்பதாக கூறி வேனிலே மயக்கமடைந்தார். உடனடியாக அவரை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர், சிகிச்சை முடிந்து போலீஸார் சவுக்கு சங்கரை, சென்னை புழல் சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.

SCROLL FOR NEXT