தமிழகம்

பால் சப்ளை நிறுத்த உற்பத்தியாளர்கள் திட்டம்?: தட்டுப்பாடு வராது என ஆவின் விளக்கம்

செய்திப்பிரிவு

ஆவின் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்குவதை பால் உற்பத்தி யாளர்கள் திங்கள்கிழமை நிறுத்தப் போவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் விற்பனை யாளர்கள் சங்கம் கூறியுள்ளது. ஆனாலும், விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஆவின் நிர்வாகம் கூறியுள்ளது.

தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி சென்னையில் நிருபர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

தனியார் பால் நிறுவனங்கள் தங்களுக்கு பால் வழங்கும் உற்பத்தி யாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குகிறது. தனியார் பால் விலை இந்த ஆண்டு மட்டும் 3 முறை உயர்ந்துள்ளது. ஆனால் ஆவின் நிறுவனம் கடந்த ஜனவரியில் ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையை ரூ.3 உயர்த்தியது. அதற்குப் பிறகு உயர்த்தவில்லை. ஆவின் நிறுவனத்துக்கு வழங்கப்படும் ஒரு லிட்டர் எருமை பால் ரூ.30-க்கும், பசும்பால் ரூ.23-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. தனியார் பால் விற்பனை விலையைவிட ஆவின் பால் விற்பனை விலை சுமார் ரூ.11 குறைவாக உள்ளது.

இவற்றை கருத்தில் கொண்டு, ஆவின் பால் கொள்முதல் விலையை தமிழக அரசு ரூ.10 உயர்த்தி வழங்கவேண்டும். கூட்டுறவு சங்கங் களில் பால் உற்பத்தியைப் பெருக்கி தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்குவதை வரும் செப்டம்பர் 1-ம் தேதி திங்கள்கிழமை நிறுத்த பால் உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இவ்வாறு எஸ்.ஏ.பொன்னுசாமி கூறினார்.

இதுபற்றி கேட்டதற்கு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் செங்கோட்டுவேல் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘ஆவின் நிறுவனம் வைத்துள்ள 8 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களில் எங்கள் அமைப்பு சார்பாக சுமார் 4 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்களின் எந்த சங்கத்தினரும் கூட்டுறவு சங்கத்துக்கு பால் வழங்குவதை நிறுத்த முடிவு செய்யவில்லை. எப்போதும்போல பால் வழங்கப் படும். பால் கொள்முதல் விலையை அரசு மற்றும் ஆவின் நிர்வாகம் உயர்த்தி வழங்கவேண்டும்’’ என்றார்.

ஆவின் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘வரும் திங்கள் கிழமை ஆவின் பால் வழக்கம்போல தமிழகம் முழுவதும் கிடைக்கும். பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கூட்டுறவு சங்கத்துக்கு பால் வழங்குவதை உற்பத்தி யாளர்கள் நிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் ஆவின் நிர்வாகம் அதை சமாளிக்கும்’’ என்றார்.

SCROLL FOR NEXT