தமிழகம்

தமிழகத்துக்கு வந்தால் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவோம்: ஆர்ப்பாட்டத்தில் முத்தரசன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: பிரதமர் தமிழகத்துக்கு வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சென்னை, அண்ணாசாலையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற கட்சி நிர்வாகிகள், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவர் முகம் மாதிரி கொண்ட முகமூடியை அணிந்து, அல்வா கிண்டுவது போல் எதிர்ப்பை பதிவு செய்தனர். தொடர்ந்து, வேலைவாய்ப்பின்மை மற்றும் பட்ஜெட்டில் தமிழகம்புறக்கணிப்புக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் இரா.முத்தரசன் கூறியதாவது: நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக பேட்டியளித்த பிரதமர், கட்சி அரசியலைக் கடந்து நாடாளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார். ஆனால், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டோ பிரதமரின் கருத்துக்கு நேர்மாறான முறையில் அமைந்துள்ளது. தேச விரோத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் மீதான இந்த நிலைமையை பாஜக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்குள் வந்தால் கருப்புக் கொடி காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அவர் தமிழகத்தை புறக்கணிக்கும்போது, அவர் எங்களுக்கான பிரதமரும் அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT