தமிழகம்

தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள் நியமனம் குறித்து விசாரணை குழு: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி ஆசிரியர் நியமனம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட 224 பொறியியல் கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாக அறப்போர் இயக்கம் அமைப்பு கடந்த 2 நாட்களுக்கு ஆதாரங்களுடன் குற்றம்சாட்டியது.

முறைகேட்டில் ஈடுபட்டுள்ள கல்லூரி நிர்வாகத்தினர் மீதும், பேராசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைகக்கழகம், தமிழக அரசு மற்றும் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் நேற்று நடைபெற்ற ட்ரோன் தொழில்நுட்பம் தொடர்பான தேசிய கருத்தரங்கில் பங்கேற்ற அண்ணா பல்லைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜிடம் இந்த பிரச்சினை குறித்து கேட்டபோது அவர் அளித்த பதில்: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் 52,500 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2 ஆயிரம் பேராசிரியர்கள் பற்றாக்குறை இருந்ததால் 189 பேராசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றுவதாக கல்லூரிநிர்வாகத்தினர் கணக்கு காட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில், தனியார் பொறியியல் கல்லூரிகளின் பேராசிரியர்கள் விவரங்களை ஆய்வு செய்தோம். அப்போது 189 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்கள் வெவ்வேறு ஆதார் எண்களை கொடுத்துள்ளனர்.

அவர்களின் பிறந்த தேதி மற்றும் இன்னொரு தொழில்நுட்ப முறை வாயிலாக அவர்களை அடையாளம் கண்டோம். இதுகுறித்து விசாரிப்பதற்காக குழு அமைத்துள்ளோம். முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகத்தினர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த பேராசிரியர்கள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேல்ராஜ் கூறினார்.

SCROLL FOR NEXT