மதுரை - உசிலம்பட்டி இடையே 2019ல் ரயில் இயக்கப்படும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மதுரை - போடி ரயில் பாதையை அகலரயில் பாதையாக மாற்றும் பணிக்காக அவ்வழியில் ரயில்கள் போக்குவரத்து கடந்த 2011 ஜனவரியில் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ரூ.300 கோடியில் அகலப்பாதையாக மாற்றும் பணி சில மாதங்களில் தொடங்கியது. மதுரை- போடி வரை சுமார் 190 பாலங்கள் அமைக்கப்படுகின்றன.
இதில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய பாலங்கள் அமைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகை நிதி ஒதுக்கப்படுகிறது. அதற்கேற்ப நடந்தாலும், ஆமை வேகத்திலேயே பணி நடக்கிறது. தமிழகத்தில் மதுரை- போடி பாதையில் மட்டுமே ரயில் போக்குவரத்து இல்லை.
பணியை விரைந்து முடிக்கவேண்டும் என, பாதிப்பை உணர்ந்த பொதுமக்கள், வர்த்தகர்கள், மாணவர்கள், அரசு, தனியார் ஊழியர்கள் உள்ளிட்டோர் விரைந்து பணியை முடித்து ரயில்களை இயக்க வேண்டும்என, தொடர்ந்து கோரிக்கை விடுத்தாலும் முடிந்தபாடில்லை.
இந்நிலையில் 2018-19ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளும் பணிக்கென ரூ.80 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இதுவரை ஒதுக்கிய நிதியில் இதுவே கூடுதல் ஆனது. இந்த நிதி மூலம் மதுரை- உசிலம்பட்டி வரையிலான பாதையை முழுவதுமாக முடிக்க ரயில்வே பொறியியல் பிரிவு திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணியை துரிதமாக மேற்கொண்டுள்ளனர். 2019-ல் மதுரை - உசிலம்பட்டி வரை பயணிகள் ரயிலை இயக்கப்படும் என, ரயில்வே கட்டுமான பிரிவு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழகத்தில் இறுதியாக அகல ரயில் பாதை மாற்றும் வழித்தடம் மதுரை- போடி பாதையாகதான் இருக்க முடியும். மதுரை- போடி சுமார்
88 கி.,மீட்டர் தூரத்திற்கான இப்பணிக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒதுக்கப்படும் நிதியை பொறுத்து பணிகள் நடக்கின்றன. இவ்வாண்டு சற்று கூடுதலாக ரூ.80 கோடி ஒதுக்கி உள்ளனர். இதன் மூலம் மதுரையில் இருந்து ஆண்டிபட்டி வரை ஏறக்குறை பாலம், தண்டவாளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
முதல்கட்டமாக மதுரை- உசிலம்பட்டி வரை முழுவதுமாக பணியை முடித்து ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பணிகளை துரிதப்படுத்தி உள்ளோம். 2019 மார்ச் மாதத்திற்குள் மதுரை- உசிலம்பட்டிக்கு ரயில் ஓடும். அடுத்த கட்டமாக ஒதுக்கும் நிதியை பொறுத்து பணிகள் நடக்கும். மதுரை- போடி அகலப்பாதை பணி முடிய 2021 ஆம் ஆண்டை தொடும்" என்றார்.