கோவை வடவள்ளியில் வசித்து வருபவர் என்.உமாதாணு (வயது 75). அரசு உதவி பெறும் பள்ளியில் கணித ஆசிரியராக 35 ஆண்டுகள் பணியாற்றிய இவர் மாணவர்கள் கணிதத்தை எளிதாக படிக்க உதவியாக யூனுஸ் என்ற புதிய முறையை கண்டுபிடித்துள்ளார். அது தொடர்பான மாதிரி வகுப்புகளை தென் மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கும் நடத்தி வருகிறார்.
இவர் நாகர்கோவில் மாணவர் களுக்கு மாதிரி வகுப்பு எடுப்பதற் காக தனது மனைவியுடன் சென்றுள்ளார். அங்கிருந்து கடந்த மாதம் 27-ம் தேதி இரவு நாகர்கோவில் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி பெட்டியில் கோவை புறப்பட்டார். அவருக்கும் அவரது மனைவிக்கும் இரண்டு மேல்அடுக்கு படுக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. முதுமை காரணமாக இருவரும் மற்ற பயணிகளிடம் கேட்டு கீழ் அடுக்கில் இருந்த படுக்கைகளுக்கு மாறிக்கொண்டனர். ஆனால் அங்கு தூங்கிக்கொண்டிருந்த அவரை எழுப்பிய டிக்கெட் பரிசோதகர், கீழ் அடுக்கு படுக்கையை காலி செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் அவர் தரையிலேயே படுத்து பயணம் செய்துள்ளார்.
இதுகுறித்து உமாதாணு கூறியதாவது:
நான் கீழ் அடுக்கில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மதுரையில் ஏறிய டிக்கெட் பரிசோதகர், பின்னிரவு 1 மணிக்கு என்னை தட்டி எழுப்பினார். நான் படுத் திருக்கும் கீழ் அடுக்கு வேறொரு பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டிருப் பதால், நான் அதைக் காலி செய்து மேல்அடுக்கு படுக்கைக்குப் போகவேண்டும் என்றார்.
என்னால் மேல்அடுக்கு படுக் கைக்கு ஏறிச்செல்ல முடியாது. எனவே கீழ் அடுக்கிலேயே பயணம் செய்ய அனுமதியுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் என்னை வலுக் கட்டாயமாக கீழ் அடுக்கு படுக்கையை காலி செய்ய வைத்தார். இவ்வாறு அவர் கூறினார்.
ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவுக்கும், உயர் அதிகாரி களுக்கும் அவர் கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார். மூத்த குடிமக்களுக்கு கீழ் அடுக்கு படுக்கையை மட்டுமே ஒதுக்கும் வகையில் கணினி மென்பொருளை ரயில்வேயில் உடனடியாக உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.