தமிழகம்

கேரளத்தில் சேவை வரி விதிப்பால் ஈரோட்டில் ஜவுளிகள் தேக்கம்: ஓணம் பண்டிகை விற்பனை பாதிப்பு

செய்திப்பிரிவு

கேரளாவில் ஜவுளி ரகங்களுக்கு 2 சதவீத சேவை வரி விதிக்கப்பட்டுள்ளதால், ஈரோடு ஜவுளி சந்தையில் கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்வது குறைந்துள்ளது. ஓணம் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கேரள வியாபாரிகளை எதிர்பார்த்து ஈரோடு ஜவுளி சந்தை வியாபாரிகள் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின் போது ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அதிகரிப்பது வழக்கம். அதுபோல, கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணத்தின் போது, ஈரோடு ஜவுளி சந்தையில் இருந்து அதிக அளவிலான துணிவகைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

ஈரோடு ஜவுளி சந்தையில் இருந்து குழந்தைகள் ரெடிமேடு ரகங்கள், ரெடிமேடு சர்ட், பேண்ட் மற்றும் சுடிதார் மெட்டீரியல், லுங்கி,பனியன், துண்டு மற்றும் உள்ளாடைகள், திரைச்சீலை போன்றவற்றை கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்து அங்கு விற்பனை செய்து வருகின்றனர். செப்டம்பர் 7-ம்தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜவுளி சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஜவுளி ரகங்கள் விற்பனைக்காக தயாராக உள்ளன. ஆனால், கேரள வியாபாரிகளின் வருகையும் கொள்முதலும் டல் அடிப்பதால், ஜவுளி வியாபாரிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு கனி மார்க்கட் வார ஜவுளி சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது: கேரளாவில் ஜவுளி ரகங்களுக்கு 2 சதவீதம் சேவை வரியை கேரள அரசு விதித்துள்ளது. அதன் எதிரொலியாக அங்கிருந்து வழக்கமாக வரும் சிறு, குறு வியாபாரிகளின் வருகை குறைந்துள்ளது. ஈரோட்டில் இருந்து அவர்கள் கொள்முதல் செய்து செல்லும் ஜவுளி ரகங்களுக்கு சேவை வரி செலுத்துமாறு கேட்டு வாளையார் சோதனைச்சாவடியில் கெடுபிடி செய்கின்றனர். சேவை வரி செலுத்துவோரிடம் டின் நம்பர் கேட்கின்றனர்.

பெரிய ஜவுளி வியாபாரிகள் மட்டுமே டின் நம்பர் வைத்து வியாபாரம் செய்கின்றனர். சிறு வியாபாரிகளிடம் டின் நம்பர் இல்லாததால் சரக்குகளை வாளையாரை தாண்டி கொண்டு செல்ல முடியாமல் கேரள ஜவுளி வியாபாரிகள் தவிக்கின்றனர். இதன் காரணமாக கேரளாவில் இருந்து வரும் ஜவுளி வியாபாரிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. ஓணம் சீசனில் சந்தை நாட்களில் தினமும் ரூ.2 கோடி வரை வியாபாரம் நடக்கும். தற்போது வியாபாரம் 60 சதவீதம் குறைந்துவிட்டது.

இவ்வாறு செல்வராஜ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT