கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையில், கள்ளச் சாராய சம்பவத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 7 பேரை காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றிய காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, காவல் சரகம் வாரியாக கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், கள்ளச்சாராயத்தை கண்காணிக்கத் தவறியதாக மாவட்ட எஸ்பி சமய்சிங்க மீனா,மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டி செல்வி, திருக்கோவிலூர் உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர்கள் ஆனந்தன்,சிவசந்திரன்,காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ்குமார் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து ரஜத் சதுர்வேதி புதிய கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற பின், ஜூன் 22-ம் தேதி மாவட்டம் முழுவதும் 5 காவல் ஆய்வாளர்கள், 7 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து மதுவிலக்கு குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய உத்தரவிட்ட நிலையில், கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல் 500 லிட்டர் பிடிக்கக்கூடிய 2 பேரல்களில் சுமார் 1,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே அழிக்கப்பட்டது.
மேலும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 64 நபர்கள் மீது 59 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 18 பெண்கள் உட்பட59 குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இதைதொடர்ந்து கடந்த வாரம் மாவட்டத்தில் உள்ள மதுவிலக்குப் பிரிவில் பணியாற்றி 5 உதவி காவல் ஆய்வாளர்கள், 78 காவலர்கள் மாவட்டத்திற்குள்ளேயே சரகம் விட்டு சரகம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத்தவறியவர்கள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட எஸ்பி ரஜத் சதுர்வேதி, முதல்கட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் சண்முகம், தனிப்பிரிவைச் சேர்ந்தகள்ளக்குறிச்சி காவல் நிலைய எஸ்எஸ்ஐ சுப்ரமணி,காவலர் பாலசுப்ரமணி, திருக்கோவிலூர் எஸ்எஸ்ஐ ராஜேந்திரன்,சங்கராபுரம் காவல் நிலைய காவலர் சிவஜோதி,சின்னசேலம் காவல்நிலைய காவலர் சரவணன், கச்சிரா யப்பாளையம் காவல் நிலைய காவலர் கணேஷ் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளார்.
காவல் துறை சார்பில், இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், மதுவிலக்குப் பிரிவில் பணியாற்றிய காவலர்களை அதே மாவட்டத்திற்குள்ளேயே பணியிட மாற்றம் செய்திருப்பது கள்ளச்சாராயத்தை முழுமையாக தடுக்க இயலாது என்ற கருத்து வலுத்து வருகிறது. வேறு மாவட்டத்திற்கோ அல்லது வேறு பிரிவுக்கோ மாற்றுவதோடு மதுவிலக்குப் போலீஸார் மூலம் ஆதாயம் அடைந்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கள்ளச் சாராய பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்பது மாவட்ட மக்களின் விமர்சனமாக உள்ளது.
62 போலீஸார் மாற்றம்: வடக்கு மண்டல ஐஜியாக பொறுப்பேற்றுள்ள அஸ்ராகார்க், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு உதவி ஆய்வாளர் உட்பட17 போலீஸார், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 உதவி ஆய்வாளர்கள் உட்பட 14 போலீஸார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 உதவி ஆய்வாளர்கள் உட்பட 31 போலீஸார் என மொத்தம் 62 போலீஸாரை வேலூர்சர கத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.