தமிழகம்

புதிய மெட்ரோ நிலையங்களில் போதிய பார்க்கிங் வசதி; கூடுதல் நிலம் கையகப்படுத்த முயற்சி - அதிகாரிகள் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், இந்த திட்டத்தில் இடம்பெறும் ரயில் நிலையங்களை ஒட்டி அல்லது அதன் அருகேபார்க்கிங் வசதி போதிய அளவில்இடம் பெற வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது, முதல் கட்டம், முதல்கட்ட நீட்டிப்பு மெட்ரோ ரயில் திட்டத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தப்பகுதியில் டுவீலர், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்ததேவை அதிகரித்துள்ளது.

பயணிகள் கோரிக்கை: முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பார்க்கிங்-க்கு தாமதமாக வரும் நபர்களுக்கு வாகனத்தை நிறுத்த இடமில்லா தநிலையும் உள்ளது. எனவே, 2-ம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இடம்பெறும் மெட்ரோ நிலையங்களில் பெரிய இடத்துடன் பார்க்கிங் வசதி அமைக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டத்தில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையங்களை ஒட்டியோ அல்லது அதன் அருகிலோ போதிய அளவில் பார்க்கிங் வசதி இடம்பெறும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: 2-ம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்துக்கு இடம் கையகப்படுத்தும் பணி ஏறக்குறைய முடிந்துவிட்டது. சில இடங்களில் சிறிய அளவில் இடம் தேவைப்படுகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலைய திட்ட வடிவமைப்பில் ஏறுவதற்கு மட்டும் நகரும் படிக்கட்டு குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது, இறங்குவதும் நகரும் படிக்கட்டு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கூடுதலாக இடம் தேவைப்படும் இடங்களில் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையத்தில் இடம்பெறும் மெட்ரோ ரயில் நிலையங்களில் தேவையான அளவில் பார்க்கிங் வசதி இடம்பெறும். இதற்கு எங்கு எல்லாம் கூடுதல் இடம் தேவையை அங்கே இடத்தை பெற முயற்சி எடுத்துள்ளோம் என்றனர்.

SCROLL FOR NEXT