சென்னை: பணியின்போது முப்படை வீரர்கள் இறந்தாலோ அல்லது ஓய்வு பெற்ற நிலையில் இறந்தாலோ அவர்களது குடும்பத்துக்கு 48 மணி நேரத்துக்குள் ஓய்வூதியம் வழங்கப்படும் என பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ‘இந்து தமிழ் திசை’நாளிதழிடம் அவர் கூறியதாவது: பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் முப்படைகளுக்கான கணக்கு, தணிக்கை, நிதி ஆலோசனை மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மத்திய அரசு 100 நாள் செயல் திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் முதல்படியாக ஜுலை 1 முதல் 31-ம் தேதி வரை குடும்பஓய்வூதிய மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், இரட்டை ஓய்வூதியம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.
கடந்த 2012-ம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த அரசாணைப்படி, முப்படைகளில் பணிபுரிந்தவர்கள் இரண்டு ஓய்வூதியம் பெற தகுதிவாய்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டது. இதன்படி தகுதி வாய்ந்தவர்கள் அதன் விவரத்தை தெரிவித்தால், பணியில் இருந்து ஓய்வு பெற்ற தேதியில் இருந்து ஓய்வூதியம் பெற்று தரப்படும்.
ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை சென்னை, திருச்சி, நாகர்கோவிலில் உள்ள அலுவலகத்தில் தெரிவிக்கலாம். அல்லது pgportal.gov.in/pension என்ற இணையதளத்திலும், 8807380165 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் தெரிவிக்கலாம். மேலும், ‘ஸ்பர்ஷ்’ திட்டத்தின் மூலமும் தெரிவிக்கலாம். 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரரின் வீட்டுக்கேசென்று குறைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்கிறோம்.
முப்படைகளில் பணியின்போது இறந்தாலோ அல்லது ஓய்வுபெற்ற பிறகு இறந்தாலோ அவர்களது குடும்பத்தினருக்கு 48 மணி நேரத்துக்குள் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜெயசீலன் கூறினார்.