உதகை: நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவலாஞ்சியில் அதிகபட்சமாக 372 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கன மழைக்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டால் சமாளிக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் (ஜூலை 14) இரவு முதல் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முறிந்து விழுந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஒரு சில இடங்களில் லேசான மண் சரிவும் ஏற்பட்டுள்ளது.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்று மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவலாஞ்சி சுற்றுலா மையம் இன்றும் நாளையும் மூடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் மழை பெய்து வருவதால் வழக்கத்தை விட உதகைக்கு சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்துள்ளது. ஏற்கெனவே வந்துள்ள சுற்றுலா பயணிகளும் மழையின் காரணமாக வெளியில் எங்கும் செல்லமுடியாமல் தங்கும் விடுதிகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் உதகை அரசு தாவரவியல் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. ஒரு சில சுற்றுலா பயணிகள் மட்டும் குடை பிடித்தபடி மழையிலும் பூங்காவை ரசித்து வருகிறார்கள்.
இதேபோல் உதகை படகு இல்லத்தில் மிதிபடகு சவாரி இன்று நிறுத்தப்பட்டது. மோட்டார் படகு மட்டும் இயக்கப்படுகிறது. நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது. சில இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மழையால் வரத்துக் குறைந்து விலை அதிகரித்து காணப்பட்ட பூண்டு பயிர் அறுவடையிலும் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். உதகையில் நேற்று 13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. காற்றின் வேகம் மணிக்கு 8.1 கிலோ மீட்டர் என்று அளவில் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 97 சதவீதமாக இருந்தது.
நீலகிரியில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-
உதகை - 53.3 மி.மீ
நடுவட்டம் - 79 மி.மீ
கிளன்மார்கன் - 59 மி.மீ
கெத்தை - 19 மி.மீ
அவலாஞ்சி - 372 மி.மீ
எமரால்டு - 135 மி.மீ
அப்பர் பவானி - 248 மி.மீ
கூடலூர் - 108 மி.மீ
தேவாலா - 84 மி.மீ
பந்தலூர் - 92 மி.மீ
சேரங்கோடு - 113 மி.மீ
கோடநாடு - 16 மி.மீ
கீழ் கோத்தகிரி - 13 மி.மீ
கோத்தகிரி - 9 மி.மீ
செருமுள்ளி - 82 மி.மீ
பாடந்தொரை - 85 மி.மீ
ஓ வேலி - 88 மி.மீ