தமிழகம்

கோயம்பேடு சந்தையில் சாம்பார் வெங்காயத்தின் விலை ரூ.30 ஆக குறைந்தது

செய்திப்பிரிவு

சென்னை: கோயம்பேடு சந்தையில் சாம்பார் வெங்காயத்தின விலை கிலோ ரூ.30 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 90 சதவீதம் சாம்பார் வெங்காயம், 10 சதவீதம் பெரிய வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சாம்பார் வெங்காயம் குறிப்பாக பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.

வழக்கமாக பெரிய வெங்காயத்தின் விலை குறைவாகவும், சாம்பார் வெங்காயத்தின் விலை உயர்ந்தும் காணப்படும். சில மாதங்களுக்கு முன்புகூட சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்டு வந்தது. முந்தைய ஆண்டுகளில் ரூ.180 வரையும் விற்கப்பட்டது.

தற்போது கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் சாம்பார் வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, சாம்பார் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30 ஆக குறைந்திருந்தது.

மற்ற காய்கறிகளான முருங்கைக்காய் ரூ.60, கேரட் ரூ.55, தக்காளி ரூ.52, அவரைக்காய் ரூ.45, பீன்ஸ், பாகற்காய் தலா ரூ.40, கத்தரிக்காய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு தலா ரூ.25, வெண்டைக்காய், புடலங்காய், பீட்ரூட், நூக்கல் தலா ரூ.20, முட்டைக்கோஸ் ரூ.18 என விற்கப்பட்டு வருகிறது.

சாம்பார் வெங்காயத்தின் விலை குறைந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, ‘தற்போது சந்தைக்கு சாம்பார் வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் விலை குறைந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி பெரிய வெங்காயத்தின் விலையும், சாம்பார் வெங்காயத்தின் விலையும் கிலோ ரூ.30 ஆக இருந்தது. அந்த அளவுக்கு விலை குறைந்துள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு சாம்பார் வெங்காயத்தின் விலை குறைந்தே இருக்கும்' என்றனர்.

SCROLL FOR NEXT