திருவள்ளூர்: திண்டிவனம் - நகரி அகல ரயில் பாதை திட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் நில எடுப்பு செய்யப்பட்டதற்கு இழப்பீட்டுத் தொகை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம், இன்றுமுதல் (15-ம் தேதி) ஆகஸ்ட் 1 வரை நடக்கிறது.
திண்டிவனம் முதல் நகரி வரையிலான அகல ரயில் பாதை திட்டத்துக்காக திருவள்ளூர் மாவட்டத்தில், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய இரு வட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் நில எடுப்பு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகை பெறாதபட்டாதாரர்களுக்கான சிறப்பு முகாம், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் இன்று முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை, காலை 10 மணிமுதல், மதியம் 3 மணிவரை நடைபெற உள்ளது.
இதில், இன்று பாண்டரவேடுவிலும், நாளை கொளத்தூரிலும், வரும் 18-ம் தேதி பொதட்டூர்பேட்டையிலும், 19-ம் தேதி கொல்லாலகுப்பம், 22-ம் தேதி பத்மாபுரம், 23-ம் தேதி பெருமாநல்லூர்-1, 24-ம் தேதி பெருமாநல்லூர்-3, 25-ம் தேதி பெருமாநல்லூர்-2, 26-ம் தேதி ஆதிவராகபுரம், 29-ம் தேதி வங்கனூர், 30-ம் கிருஷ்ணமராஜகுப்பம், 31-ம் தேதி விளக்கணாம்பூடி, ஆகஸ்ட் 1-ம் தேதி மீசாரகண்டபும் பகுதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில், இழப்பீட்டுத் தொகை பெறாத பட்டாதாரர்கள் பங்கேற்று, தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு), திண்டிவனம்- நகரிஇருப்புப்பாதை திட்ட அலுவலரிடம் தங்களுடைய நிலம் தொடர்பான பட்டா, பத்திரம், வில்லங்கச் சான்று, வங்கி கணக்குப் புத்தகம்மற்றும் ஆதார் அட்டை, பான்கார்டுநகல்களை அளித்து இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.