சென்னை: சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிநிறுவனத்தில் மருத்துவ கல்வியாளர்கள் சர்வதேச மாநாடு நேற்று தொடங்கியது.
இந்தியா மற்றும் பிற நாடுகளில்இருந்து 200-க்கும் மேற்பட்ட மருத்துவநிபுணர்கள் பங்கேற்று, மருத்துவக் கல்வியில் புதுமை உருவாக்கும் உத்திகள் குறித்து விவாதித்தனர். ஸ்ரீராமச்சந்திரா பல்கலை.வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், மருத்துவ மற்றும் துணை மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெறும் மெய்நிகர் சிமுலேஷன் ஆய்வகத்தை தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் மாணவர் படிப்பு திட்டங்களை மதிப்பீடு செய்தல், மருத்துவ சிகிச்சை திறன்களில் பயிற்சி அளித்துஅவற்றுக்கு சான்றிதழ்கள் வழங்குவது, தேசிய மற்றும் பன்னாட்டு தரவரிசை பட்டியலுக்கான கல்வித்தர குறியீடுகள் வளர்த்தல், மருத்துவக் கல்வி ஆய்வு, கட்டுரைகள் வெளியீடுமற்றும் சிமுலேஷன் முறையில் திறன்வளர்ப்பு ஆகியவை குறித்து இந்தியாமற்றும் பிற நாட்டு பிரபல மருத்துவர்கள் பயிலரங்குகளை நடத்தினர்.
குறிப்பாக, மருத்துவ மாணவர்கள் தங்களை மேம்படுத்தி கொள்வதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் கூடிய புத்தகம் வெளியிடப் பட்டது.
மாநாட்டில் பிரிட்டன் ஹல்யார்க் மருத்துவக் கல்லூரியின் சிமுலேஷன்பேராசிரியர் மகானி பூர்வா பேசும்போது, “சிமுலேஷன் தொழில்நுட்பம் தற்போது மருத்துவக் கல்வி மற்றும் சிகிச்சையில் பல சவால்களுக்கு தீர்வாக அமையும். நோயாளிகளைப் பரிசோதனை செய்து, அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து கல்வி கற்பதை சிமுலேஷன் தொழில்நுட்பம் அளிக்க முடியாது. ஆனாலும், பிறவகைகளில், மருத்துவ கல்வி கற்பதும், சிகிச்சை அளிப்பதும் மேம்படும்” என்றார்.
கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரியின் தொற்றுநோய்த் துறை பேராசிரியர் சாஜித்குமார் பேசும்போது, “திறன் சார்ந்த மருத்துவ கல்வி முறையில் எம்பிபிஎஸ் மாணவர்களின் முதல்தொகுப்பு வெற்றிகரமாக நாடுமுழுவதும் வெளிவந்துள்ளது. இம்முறையான கல்வி இன்னும் வளர்ந்து வரக்கூடும். திறன் சார் கல்வியில் தொலைதூர மருத்துவம், செயற்கை நுண்ணறிவு மற்றும் எண்ம மருத்துவ வசதி ஆகியவற்றை இணைக்க வேண்டும்” என்றார்.
ஸ்ரீராமச்சந்திரா பல்கலையின் துணைவேந்தர் உமாசேகர், இணைதுணைவேந்தர் மகேஷ் வக்கமுடி,கல்லூரி டீன் கே.பாலாஜி சிங், மருத்துவக் கல்வி ஆசிரியர்கள் மேம்பாடு ஒருங்கிணைப்பாளர் எம்.சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாடு இன்று நிறைவடைகிறது.