சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் பாதையை அடுத்த ஆண்டு டிசம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒன்று கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) வழித்தடம். இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப் பாதையும் அமைக்கப்படுகிறது.
உயர்மட்டப் பாதை அமைக்கப்பட்டுள்ள குமணஞ்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன் தாங்கல் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோரயிலுக்கான தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில்நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லி பைபாஸ் – போரூர் இடையே மெட்ரோ ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் அடுத்த மாதத்தில் முடிக்கத் திட்டமிட்டுள்ளது. பல இடங்களில் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர் வரை மெட்ரோ ரயில் பாதையை அடுத்த ஆண்டுடிசம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர் இடையே உயர்மட்டப் பாதை பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மத்தியில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பிறகு, இந்தப் பாதையை அடுத்த ஆண்டுடிசம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இத்தடத்தில் வடபழனி வரை வரும் 2025-ம் ஆண்டு மத்தியில் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது, சில மெட்ரோ ரயில் நிலைய பணிகள் முடிந்து இருக்காது. இருப்பினும், வடபழனி வரை மெட்ரோ ரயில் சேவையை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணிகளை வரும் 2027-ம் ஆண்டுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.