தமிழகம்

ஆம்ஸ்ட்ராங் வீட்டில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி: குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதாக குடும்பத்தினரிடம் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின்மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள அவரது வீடு அருகே கடந்த 5-ம் தேதிபடுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திமுக கூட்டணி கட்சியினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இந்நிலையில், தமிழக சட்டம் - ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று காலை நடைபெற்றது.

இதில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின் செயலர் நா.முருகானந்தம், உள்துறை செயலர் அமுதா, டிஜிபி சங்கர்ஜிவால், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல் ஆணையர்கள் அருண் (சென்னை), சங்கர் (ஆவடி), அமல்ராஜ் (தாம்பரம்), உளவுப் பிரிவு ஐ.ஜி. செந்தில்வேலன் ஆகியோர் பங்கேற்றனர்.தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் கொலை, கொள்ளை சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்ற நிகழ்வுகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

முதல்வர் அறிவுறுத்தல்: காவல் துறை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு முதல்வரின் செயலர் விளக்கினார். தலைமைச் செயலரும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அதன்படி, குற்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும். ரவுடிகள், தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரைஇரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என்பது உள்ளிட்டபல்வறு அறிவுறுத்தல்களை முதல்வர் வழங்கினார்.

முன்னதாக, சமீபத்தில் கொலைசெய்யப்பட்ட பகுஜன் சமாஜ்மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர் சேகர்பாபு உடன் இருந்தார். இதைத் தொடர்ந்து, முதல்வர் வெளியிட்ட சமூக வலைதள ப்பதிவில் கூறியிருப்பதாவது:

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவையொட்டி, சென்னை பெரம்பூரில் உள்ள இல்லத்துக்கு சென்று, அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தினேன்.

துயரில் வாடும் அவரது மனைவிபொற்கொடி மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்,ஆறுதலை தெரிவித்தேன். கொலை பாதக செயலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத் தருவோம் என்று பொற்கொடிக்கு உறுதியளித்தேன்.

கொலை குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும், அவர்களை கண்டறிந்து தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து, எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும். காவல் துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையாற்றும்.

இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT