சென்னை: சுற்றுலா துறையின் அறிவிப்புகளை விரைந்து செயல்படுத்தி அவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவுறுத்தினார்.
சுற்றுலா துறையால் மேற் கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாக கூட்டரங்கில் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பயணிகளை ஈர்க்கும் மாநிலம்: முதல்வரின் சிறப்பான நடவடிக்கைகளால், அதிக அளவில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முதன்மை மாநிலமாக தமிழகம் முன்னேறியுள்ளது. தமிழகத்துக்கு ஆண்டு முழுவதும் அதிக சுற்றுலா பயணிகள் வரும்வகையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன.
நடப்பு நிதி ஆண்டில் சுற்றுலா துறை மானிய கோரிக்கையில் மொத்தம் 12 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா தேவாலய பகுதி, சிவகங்கை மாவட்டம் பிரான்மலை பகுதி, திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி - தெற்கு கள்ளிக்குளம் தேவாலயபகுதி, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை ஆகிய வழிபாட்டு தலங்களில் ரூ.8.10 கோடியில் அடிப்படை வசதிகள் மேற்கொள் ளப்பட உள்ளன.
அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, கன்னியாகுமரியில் சங்குதுறை, சொத்தவிளை, சூரிய காட்சிமுனை, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஆகிய கடற்கரை பகுதிகளில் ரூ.6.50 கோடியில் வளர்ச்சி பணிகள், சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குதல், பல்வேறு சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.2 கோடியில் பெருந்திட்டம் தயாரிப்பு ஆகிய அறிவிப்புகள் இதில் குறிப்பிடத் தக்கவை.
சிறப்பாக பணியாற்ற வேண்டும்: இதுபோன்ற அனைத்து அறிவிப்புகளையும் விரைந்து செயல்படுத்தி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சுற்றுலா துறையினர் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இதுபோன்ற மேம்பாட்டு திட்ட பணிகள், உலக சுற்றுலா பயணிகளின் விருப்பமான தலமாக தமிழகத்தை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை செயலர் பி.சந்திரமோகன், சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குநர் சி.சமயமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
சுற்றுலா துறை உயர் அதி காரிகள், மாவட்ட சுற்றுலா அலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக உயர் அதிகாரிகள், மண்டல மேலாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.