தமிழகம்

தோல்வி நிலையென நினைத்தால்? தேர்வு தோல்வி பிரச்சினையே அல்ல: மன உளைச்சலுக்கு எண்.104 தரும் ஆலோசனை

செய்திப்பிரிவு

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. குறைந்த மதிப்பெண், தோல்வி என்பதெல்லாம் நிலையல்ல. தோல்வியால் நம்பிக்கை இழந்த மாணவர்கள், பெற்றோர் தக்க ஆலோசனைக்கு எண். 104-ஐ அழைக்கலாம்.

தேர்வில் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் வாழ்க்கையில் எல்லோரும் சந்திக்கும் ஒரு நிகழ்வுதான். தேர்வு முடிவுகளை இன்று லட்சக்கணக்கான மாணவர்கள் பார்த்திருப்பார்கள். தேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்ற முனைப்புடன் பலர் போராடியிருப்பார்கள்.

தேர்வில் வெற்றி பெறுவதைத் தாண்டி அதிக மதிப்பெண் எடுத்தால்தான் மரியாதை என்று நினைக்கும் போக்கு சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இது கல்வியை, கல்வி அறிவை வணிக நோக்குடன் இணைக்கும் போக்கால் வந்த விளைவு. இதை சற்று தாமதமாகப் புரிந்துகொண்ட அரசு தற்போது தேர்வில் மதிப்பெண்ணை பிரதானமாக முன்னிலைப்படுத்தக்கூடாது என்று அறிவித்துள்ளது.

அதிக மதிப்பெண் வேண்டுமா, அறிவுப்பூர்வமான கல்வி வேண்டுமா என்றால் இரண்டாவதைத்தான் தேர்வு செய்வோம். அப்படியானால் அதிக மதிப்பெண் தேவை இல்லையா என்ற கேள்வி எழலாம். அது தேவையே, ஆனால் அதிக மதிப்பெண் தேவை என்ற காரணத்திற்காக மனப்பாடம் செய்து படிக்கும் கல்வி முறை அதிகரித்து வருவதும், குறிப்பிட்ட கேள்வி- பதிலை கொடுத்து அதை மட்டுமே மனப்பாடம் செய்து எழுதும் போக்கும் நல்ல கல்வி அல்ல.

பள்ளிக்கல்வி என்பது மொழியை நமக்கு அறிமுகப்படுத்துவதற்கும், நமது அறிவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும் பயன்படுவதே. கல்லூரி படிப்பு நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. ஆனால் எல்கேஜியில் 90 மார்க் எடுத்துவிட்டால் கூட பதறும் பெற்றோர் எண்ணிக்கைதான் அதிகரித்து வருகிறது. இதைத் தவிர்க்க வேண்டும்.

பள்ளியைத் தாண்டி வெளியே படித்தவர்களே வெற்றி பெற்றுள்ளனர். ஆகவே பள்ளியில் படிக்கும் பாடம், எடுக்கும் மதிப்பெண் கல்லூரியில் படிக்க இடம் பெற்றுத்தர பயன்படும். ஆனால் அதையும் தாண்டி படிப்பதே வாழ்க்கையில் நல்ல இடத்தில் அமர்த்தப் பயன்படும்.

தேர்வில் தோல்வி அடைவது வாழ்க்கையில் பலர் சந்தித்ததே. அதற்காக அத்துடன் வாழ்க்கை முடிந்து போனது என்று யாரும் நினைக்கவில்லை. அதன் பின்னர் அவர்கள் வாழ்க்கையில் சாதித்துக் காட்டியுள்ளனர்.

ஆகவே தேர்வு தோல்வி ஒரு பெரிய விஷயமல்ல. முயன்றால் மீண்டும் வெற்றியடையலாம். தேர்வில் பலமுறை தோற்ற பின்னர் வென்ற பலர் இன்று பட்டம் வாங்கி சாதித்த கதைகள் பல இடங்களில் உண்டு.

தேர்வில் வெற்றி பெறாதவர் உயர்ந்த நிலையை அடைந்த வரலாறும் உண்டு. மிகச்சிறந்த உதாரணம் திமுக தலைவர் கருணாநிதி. பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை, பெற்றோர் கோபித்துக்கொள்வார்களோ என பட்டாளத்தில் சேரப்போவதாக நண்பரிடம் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். பதறி அடித்துச் சென்ற பெற்றோர் சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர் என 'நெஞ்சுக்கு நீதி'யில் குறிப்பிட்டிருப்பார்.

ஆனால் அவர் அத்துடன் நின்றுவிடாமல், பள்ளியைத் தாண்டி பல இலக்கியங்கள், வரலாற்று நூல்களை கற்றதால் தம் அறிவை மட்டுமே மூலதனமாக்கி வென்றார். பின்னாளில் ஐஏஎஸ் தேர்வு பெற்றவர்களே வியக்கும் வண்ணம் நிர்வாகத்தில் வழிகாட்டியாக உயர்ந்தார்.

பள்ளிப்படிப்பில் தேர்ச்சி பெற்றும் வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாமல் போன எம்ஜிஆர், இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்த காமராஜர், நடிப்புலகுக்கு வந்த காரணத்தால் படிப்பைத் தொடர முடியாமல் போன ஜெயலலிதா என தமிழகம் கண்ட அனைத்து முதல்வர்களும் கல்லூரியை எட்டிக்கூட பார்க்காதவர்கள். இதே வரிசையில் சச்சின் டெண்டுல்கர் முதல் பலரும் உள்ளனர்.

ஆகவே தேர்வில் தோல்வி அடைந்துவிட்டோம் வாழ்க்கை இத்துடன் முடிந்துவிட்டது என்று நினைப்பதனால் ஒரு லாபமுமில்லை. தோல்வியை உதறித்தள்ளி தூக்கி எறிந்துவிட்டு முன்னேறிச் சென்றவர்கள் வென்றிருக்கிறார்கள்.

பட்டம் வாழ்க்கைக்கு தேவை, பட்டம் மட்டுமே வாழ்க்கையல்ல. அதையும் தாண்டி பல விஷயங்கள் உள்ளன. கல்வி பிடிபடாத ஒரு விஷயமல்ல, நாம் எங்கே தவறி இருக்கிறோம் என்பதை கணக்கிட்டுப் படித்தால் வெற்றி மீண்டும் நம் வசமாகும்.

முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பதை சமீபத்தில் தேர்வில் வென்ற தஞ்சை கிராமத்திலிருந்து வந்த ஏழை விவசாயியின் மகன் சிவகுரு நிரூபித்துள்ளார். மரம் அறுக்கும் பட்டறையில் இரண்டரை ஆண்டு காலம் தொழிலாளியாக வாழ்க்கை முடங்கினாலும் அதையும் தாண்டி தடையை உடைத்து இன்று ஐஏஎஸ் அதிகாரியாய் உயர்ந்து நிற்பதே நம் கண் முன்னால் இருக்கும் சமீபத்திய உதாரணம்.

தோல்வி நிலையென நினைத்தால்… மனிதன் வாழ்வை நினைக்க முடியாது. தேர்வு முடிவுகள் வாழ்க்கையில் வந்துபோகும் சில சோதனைகள் தான். அதுவே வாழ்க்கை அல்ல.

தோல்வி மனப்பான்மையில் விரக்தியோ, தற்கொலை எண்ணமோ தோன்றும் மாணவர்கள் தயங்காமல் எண் 104- ஐ அழைத்தால் உங்களுடன் பேசி உங்களுக்கு நிச்சயம் நம்பிக்கையான வழிகாட்ட ஆலோசகர்கள் தயாராக உள்ளனர். மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் தேர்வில் தோல்வி அடைந்ததால் ஏற்படும் மன உளைச்சல், உறவினர்களிடம் எப்படி தலைகாட்டுவது போன்ற எண்ணமிருந்தால் அவர்களும் தயக்கமின்றி எண் 104- ஐ அழைத்தால் தகுந்த ஆலோசனை கிடைக்கும்.

SCROLL FOR NEXT