விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பரவலாக பணம் விநியோகம் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதில்,சில கிராமங்களில், ஆளும் தரப்பினர் தங்கள் பகுதிக்கு மட்டும் பணம்வழங்கவில்லை என்று குற்றச்சாட்டும் தெரிவித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக 25 அமைச்சர்கள், 100-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தொகுதியில் உள்ள கிராமங்களில் தங்கி தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
திமுக தரப்பில், கடந்த வாரம்வாக்காளர்களுக்கு முதல் தவணையாக ரூ.1,000 வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், 2-வது தவணையாக நேற்று முன்தினம் முதல் மேலும், ரூ.1,000 வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையே விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பனமலை,வெள்ளையாம்பட்டு, ஏழுசெம்பொன் உள்ளிட்ட கிராமங்களில் குறிப்பாக பாமக வலுவாக உள்ள கிராமங்களில், பாமகவினர் தவிர மற்றவர்களுக்கு திமுகவினர் பணம்வழங்கியதாக அப்பகுதி மக்கள், குறிப்பாக பெண்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, சர்ச்சையை கிளப்பியது.
இதுகுறித்து இறுதி கட்டப் பணியில் மும்முரமாக இருந்த, திமுக வெளியூர் நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, ‘பண விநியோகம் எதுவும் நடைபெறவில்லை’ என்று மறுத்தனர். இருப்பினும், பெயர் கூற விரும்பாத நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
வாக்காளர்களுக்கு 100 சதவீதம் இத்தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்றே கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. பலஇடங்களில் 100 சதவீதம் தொகையைப் பெற்று விடுவார்கள். சில கிராமங்களில், ‘தேர்தலுக்குப் பணம் பெற வேண்டாம்’ என்று வெகுசிலர் நினைக்கக்கூடும். அவர்களைதவிர்த்து, அந்தப் பகுதியிலும் 80சதவீதம் வரை விநியோகம் இருக்கவேண்டும் என்று தலைமை அறிவுறுத்தி உள்ளது. அதன்படியே விநியோகம் செய்கிறோம்.
நாங்கள் வெளியூர்காரர்கள்; அந்தந்த கிராமத்தில் உள்ள கட்சிக்காரர்களை வைத்துதான் பணம்வழங்கப்படுகிறது. ‘பண விநியோகத்தில் பாரபட்சம்’ என்ற கிராம மக்களின் குற்றச்சாட்டு ஏற்புடைய தல்ல.இவ்வாறு அவர்கள் கூறினர்.
விக்கிரவாண்டி தொகுதிக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், வாக்காளர்களுக்கு பணவிநியோகம் செய்ததாக கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியிருக் கிறது.
பணம் கொடுப்பதும் குற்றம்; பெறுவதும் குற்றம்: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 123(1) 6 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 7-ன் 171-பி மற்றும் 171-இ பிரிவுகள் லஞ்சத்தை ஊழல் நடவடிக்கையாக குறிப்பிடுகிறது.
‘லஞ்சம்’ என்பது தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்கும் ஒன்றாககருதப்படுகிறது. லஞ்சம் கொடுப்பவர் மற்றும் ஏற்றுக்கொள்பவர் இருவர் மீதும், இது குற்றச்செயலாக கருதப்படுகிறது. இதற்காக ஒரு வருட சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.