தமிழகம்

ரயில் சீசன் டிக்கெட் வழங்குவதற்கு பயணிகளிடம் மொபைல் எண் சேகரிக்க எதிர்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ரயில் பயணத்துக்கான சீசன் டிக்கெட்களை பெறவோ கவுன்ட்டர்களில் புதுப்பிக்கவோ வரும் பயணிகளிடம் மொபைல் எண்களை சேகரிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்குபயணிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் முக்கிய பொது போக்குவரத்தாக உள்ளன. சென்னையில் பணிபுரியும் பெரும்பாலான மக்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகியஇடங்களிலிருந்து ரயில்கள் மூலம் சென்னைக்கு வந்து செல்கின்றனர்.

இவர்கள் தினசரி அல்லது சீசன் டிக்கெட் எடுத்து சென்னைக்கு வந்து செல்கின்றனர். சீசன் டிக்கெட்களை 7 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில்தான் அதிக முதல் வகுப்பு சீசன் டிக்கெட்கள் வழங்கப்படுகின்றன. மேலும், சென்னை ரயில்வே கோட்டத்தில் 160 கிமீ வரை சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ரயில்களில் பயணிக்க சீசன் டிக்கெட்களை பெறவோ அல்லது கவுன்ட்டர்களில் புதுப்பிக்கவோ வரும் பயணிகளிடம் மொபைல்எண்களைச் சேகரிக்க ரயில்வேநிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முன்பதிவு ரயில் டிக்கெட்களை நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் பெறும் பயணிகளிடம் மொபைல் எண்கள் பெறப்பட்டன. தற்போது, சீசன் டிக்கெட் பெற வரும் பயணிகளிடமிருந்தும் மொபைல்எண் கோரப்படுகிறது.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: மொபைல் எண் பெறுவது கட்டாயம் என்று டிக்கெட் கவுன்ட்டர்களில் ஊழியர்கள் கூறுகின்றனர். சரியான விளக்கம் இல்லாமல் கவுன்ட்டர்களில் இதுபோன்ற அடிப்படை விவரங்களைச் சேகரிப்பது பயணிகளின் தனியுரிமையை மீறுவதாகும்.

பயணிகளின் தரவுகளைப் பாதுகாப்பதற்கான கடுமையான வழிகாட்டுதல்களை வழங்கி, மொபைல் எண்களைச் சேகரிப்பதற்கான காரணங்களை விளக்கி, அதிகாரிகள் முறையான உத்தரவைப் பிறப்பித்திருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ``மானிய கட்டணத்தில் சீசன் டிக்கெட்களைப் பெறும் பயணிகளிடமிருந்து அடிப்படை தகவல்களைச் சேகரிப்பதே இதன் நோக்கம்'' என்றார்.

SCROLL FOR NEXT