காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போராடி வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு வீரதீர செயலுக்கான ‘அசோக் சக்ரா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியளிப்பதாக அவரது தந்தை வரதராஜன் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் பகுதியில் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் தமிழக வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் (32) தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்தவர்.
அவரது வீரத்தைப் போற்றும் வகையில், வீரதீர செயலுக்கான உயரிய விருதான ‘அசோக் சக்ரா’ விருதை மத்திய அரசு அவருக்கு அறிவித்துள்ளது. மேலும் 919 காவலர்களுக்கு வீரதீரச் செயலுக்கான பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
வீரமரணம் அடைந்த முகுந்துக்கு ‘அசோக் சக்ரா’ விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து அவரது தந்தை வரதராஜன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
முகுந்துக்கு ‘அசோக் சக்ரா’ விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் சந்தோஷமாக, பெருமிதமாக உள்ளது. முகுந்த் இறந்தபோது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். பல இளைஞர்கள் நேரடியாக எங்கள் வீட்டுக்கு வந்து ‘நாங்களும் வருங்காலத்தில் மேஜர் முகுந்த்போல வருவோம்’ என்றனர்.
என் மகனின் தியாகம் இளைஞர்களிடம் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திறமையும் அர்ப்பணிப்பு உணர்வும் இருந்தால் ராணுவத்தில் சேரலாம். முகுந்த் மறைந்தாலும் எங்கள் இதயத்திலும் ஏராளமான இளைஞர்களின் நெஞ்சிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.