சென்னை: ஆம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரான பிறகு பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பட்டியலின மக்களுக்கு உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். படிப்பதற்கு வசதி இல்லாத ஏராளமான மாணவர்களை அவர் படிக்க வைத்திருப்பதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.
இவரால், அப்பகுதியை சேர்ந்த பட்டியலின மாணவர்கள், வசதி இல்லாத மாணவர்கள் ஏராளமானோர் வழக்கறிஞர், மருத்துவர்,பொறியாளர்களாக உருவாகி உள்ளனர். பலருக்கு தொழில் தொடங்க உதவிகளை செய்திருக்கிறார். திரைத்துறையிலும் நடிகர்கள், இயக்குநர்களை உருவாக்கி உள்ளார். ஆம்ஸ்ட்ராங் மறைவால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங்கால் பயனடைந்த பெரம்பூர் லாந்தர் கார்டன் பகுதியை சேர்ந்த அமுதா கூறும்போது, ‘‘எனது தம்பியை ஆம்ஸ்ட்ராங் அண்ணன்தான் படிக்க வைத்தார். எங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால், கடவுளிடம் கேட்பதற்கு முன்பு, அவரிடம்தான் கேட்போம். இப்போது அவர் எங்களை தனியாக விட்டு சென்றுவிட்டார்'’என்றார்.
வழக்கறிஞர்களை உருவாக்கினார்: வழக்கறிஞர் முல்லை அன்பரசன் கூறும்போது, ‘‘ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை ஆம்ஸ்ட்ராங் உருவாக்கி இருக்கிறார். அவர்கள் மூலம் நீதிமன்றத்தில் ஏழை மக்களின் வழக்கை வாதாடி கொடுப்பார். சட்டம் படிக்க ஆசைப்பட்டு இவரிடம் வந்தால் போதும். அவர்களை வழக்கறிஞர்களாக மாற்றி விடுவார்’’ என்றார்.
திருவூர் சங்கர் கூறும்போது, ‘‘மது அருந்துபவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டார். விளையாட்டிலும், கல்வியிலும் ஆர்வமிக்கவர்களுடன் மட்டுமே நேரத்தை செலவிட்டார். சட்டைப்பையில் எப்போதும் பேனா வைத்திருக்க வேண்டும். பேனாதான் நமக்கு ஆயுதம் என்று சிறுவர்கள், இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டே இருப்பார்’’ என்றார்.