புதுச்சேரி: "புதுச்சேரியில் ஊழல் இல்லாத ஓர் அரசு துறையைக் காட்டினால் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கத் தயார்" என சுயேட்சை எம்எல்ஏ-வான நேரு கூறியுள்ளார்.
புதுச்சேரி பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை விமர்சித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியது தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து இன்று உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்எல்ஏ-வான நேரு தலைமையில் பொது நல அமைப்பினர் 50-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அவர்களிடம் துணை மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனையேற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நேரு எம்எல்ஏ, "பொதுப் பணித்துறையில் ஊழல் நடைபெறுவதாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. ஊழல் அதிகாரிகளை பற்றி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது வெட்கக்கேடானது.
முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். அங்காளன் எம்எல்ஏ மற்றும் முதல்வரை விமர்சிக்கும் பாஜக எம்எல்ஏ-க்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத ஒரு துறையைக் காட்டினால் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கத் தயார்” என எம்எல்ஏ நேரு கூறினார்.