சென்னையில் 61 பேர் உயிரிழக்க காரணமான மவுலிவாக்கம் அடுக்குமாடிக் கட்டிட விபத்து தொடர்பாக தற்போதைய நிலவரம் பற்றிய அறிக்கையை தாக்கல் செய்யும்படி மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
“மவுலிவாக்கம் கட்டிட விபத்து சம்பவத்தில் தற்போதைய நிலவரம் பற்றிய அறிக்கையை அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். மவுலிவாக்கம் கட்டிட விபத்து பற்றி விரைவான புலன் விசாரணை நடத்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்நிலையில் ஏற்கெனவே வேறு பல விசாரணை அமைப்புகளில் பணியில் உள்ள ஒருவரால், மவுலிவாக்கம் சம்பவம் பற்றியும் நேரம் ஒதுக்கி முழுமையாக விசாரணை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, எவ்வளவு காலமாக அவை நிலுவையில் உள்ளன போன்ற விவரங்களை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீண்டும் ஆகஸ்ட் 28-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். “சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த அடுக்குமாடிக் கட்டிடத்துக்கு முறையாக அனுமதி வழங்கப்படவில்லை. உரிய அனுமதி பெறுவதற்கு முன்பாகவே கட்டுமானப் பணி தொடங்கப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனத்துக்கு ஆதரவாக விதிமுறைகளை தளர்த்தி தமிழக அரசு அரசாணைகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல் துறை புலன் விசாரணை நடத்துவது சரியல்ல. ஆகவே, வழக்கின் புலன் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். தமிழக அரசு வெளியிட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். இதற்கான உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மு.க.ஸ்டாலின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “மவுலிவாக்கத்தில் ஜூன் 28-ம் தேதி அடுக்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுவதற்கு சற்று முன்பாக அங்கு சுமார் 300 பேர் இருந்துள்ளனர். ஆனால் 61 பேர் உயிரிழந்ததாகவும், 27 பேர் காயமடைந்ததாகவும் அரசு கூறியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆகவே, இது பற்றி முழுமையான புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த சம்பவம் பற்றி விசாரிப்பதற்காக தமிழக அரசு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது. ஆனால் ஏற்கெனவே மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவராகவும், வேறொரு விசாரணை ஆணையத்தின் தலைவராகவும், மாநில அறிவுரைக் கழகத்தின் தலைவராகவும் உள்ள உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி, இந்த விசாரணை ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே, இந்த விசாரணை ஆணையத்தால் முழுமையாக விசாரணை நடத்த இயலுமா என்பது சந்தேகமாக உள்ளது” என வாதிட்டார்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, மவுலிவாக்கம் கட்டிட விபத்து மற்றும் அந்த விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.