சென்னை: திருவான்மியூர் பாம்பன் சுவாமிகோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு தடை விதிக்க சென்னைஉயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மயூரபுரம் குரு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாசர் அன்னதான சபையின் தலைவர் டி.சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்களது சபை கடந்த 1999-ம்ஆண்டு பதிவு செய்யப்பட்டு, திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் அன்னதானம் செய்து, பாம்பன் சுவாமிகளின் சிந்தனை, நம்பிக்கையை வளர்த்து வருகிறது.
பாம்பன் சுவாமிக்கு 1929-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை குப்புசாமி செட்டியார் தலைமையிலான சபை பூஜைகளை செய்துவந்தது. பின்னர் இந்த கோயிலைஅறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டது.
இதை எதிர்த்து நீதிமன்றங்களில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இந்த கோயிலில் பூஜை செய்ய மேலும் பலசபைகள் உள்ளன. இதற்கிடையே, பாம்பன் சுவாமிகளின் சமாதியைவளைத்து கோயில் போல உருவாக்கி, வரும் 12-ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள பல்வேறு தீர்ப்புகளை மீறியுள்ளனர். எனவே, வரும்12-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிபவானி சுப்பராயன் பிறப்பித்த உத்தரவு: கும்பாபிஷேகத்துக்கு தடை விதிக்க முடியாது. மனுதாரர் விழாவில் கலந்து கொள்ளலாம். ஆனால், இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
கும்பாபிஷேகம் முடிந்து 2 வார காலத்துக்குப் பிறகு மனுதாரர் தன் கோரிக்கை குறித்து அறநிலையத்துறையிடம் மனு கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் வரும் 24-ம் தேதி நேரில் ஆஜராகி அவரதுதரப்பு நியாயத்தை எடுத்துக் கூறலாம்.
தொடர்ந்து, 6 மாத காலத்துக்குள் விசாரணை முடித்து உரிய உத்தரவை அறநிலையத் துறை பிறப்பிக்க வேண்டும். கும்பாபிஷேகத்தின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.