பழவேற்காடு அருகே கருங்காலி பகுதியில் கடல்  சீற்றத்தால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மணல் கலந்த கடல் நீரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
தமிழகம்

பழவேற்காடு அருகே கடல் சீற்றம்: சாலையில் ஓடும் மணல் கலந்த நீரால் போக்குவரத்து பாதிப்பு

இரா.நாகராஜன்

திருவள்ளூர்: பழவேற்காடு அருகே கடல் சீற்றத்தால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மணல் கலந்த கடல் நீரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பழவேற்காட்டில் இருந்து, சென்னை எண்ணூர் பகுதிக்கு செல்லும் சாலை மோசமடைந்து உள்ளது. இதில் கருங்காலி என்ற பகுதியில் கடல் அரிப்பு காரணமாக, கடல் நீர் சாலையில் உட்புகுந்து அவ்வப்போது சாலையை மூடி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கருங்காலி பகுதியில் கடல் சீற்றம் காரணமாக எண்ணூர் பகுதிக்கு செல்லும் பிரதான சாலையில் மணல் கலந்த கடல் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்பால் வடசென்னை அனல் நிலையம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், தனியார் துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளம், வல்லூர் அனல் மின் நிலையம் உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள் 35 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கருங்காலி பகுதியில் சாலையில் கடல் நீர் உட்புகாதவாறு சிறிய பாலம் கட்டித் தர வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT