சென்னை: தமிழக அரசின் எரிசக்தித் துறையின் கீழ் இயங்கும் மின் ஆய்வுத் துறை, ஜூன் 26 முதல் ஜூலை 2-ம் தேதி (இன்று) வரை தேசிய மின்சார பாதுகாப்பு வாரப் பிரச்சாரத்தை மாநிலம் முழுவதும் கொண்டாடுகிறது.
இந்த ஆண்டு கருப்பொருளான, பள்ளியில் இருந்து பாதுகாப்பு தொடங்குகிறது என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு மின்சார பாதுகாப்பு பற்றி மாணவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.
அரசு தலைமை மின் ஆய்வாளர் ஞா.ஜோசப் ஆரோக்கிய தாஸ் கூறுகையில், ‘துறையின் கோட்ட மின் ஆய்வாளர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பாக மின்சாரத்தினை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வினை வழங்கி வருகின்றனர். வீடு, பள்ளி மற்றும் பொது இடங்களிலும் பாதுகாப்பான மின்சார பயன்பாட்டுக்குப் பங்களிக்க இளைய தலைமுறையினருக்கு உரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும்’ கூறினார்.
விழிப்புணர்வு பிரச்சாரங்களின் ஒரு பகுதியாக பல்வேறு அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மின்சார பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள், தகவல் கையேடுகள் மற்றும் மின் பாதுகாப்பு குறிப்புகள் அடங்கிய பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மின்சார விபத்துக்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும் கருத்தரங்குகள் மற்றும் விளக்கக் காட்சிகள் நடத்தப்பட்டன.
மேலும், அரசு தலைமை மின் ஆய்வாளர் முக்கியமான சில மின் பாதுகாப்பு குறிப்புகளை பள்ளி மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதன்படி, மின்சார சாதனங்களை ஒருபோதும் ஈரமான கைகளுடன் அல்லது தண்ணீருக்கு அருகில் பயன்படுத்த வேண்டாம். பிளக் ஸ்விட்ச்-ஐ ஆஃப் செய்தபிறகே சாக்கெட்டில் பிளக்கினைசொருகவோ எடுக்கவோ வேண்டும்.மின் கம்பங்கள் மீதோ, மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களின் மீதோ ஏற வேண்டாம். மின் கம்பிகளுக்கு அருகில் பட்டங்களை பறக்க விட வேண்டாம்.
எலக்ட்ரிக்கல் சாக்கெட்டுகளில் விரல்களையோ அல்லது கம்பி, குச்சி போன்ற பொருள்களையோ சொருக வேண்டாம். சார்ஜிங் செய்யும்போது செல்போனை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்தார்.