தமிழகம்

மதுரை காசநோய் மருத்துவமனை சிறந்து விளங்க காரணமான மருத்துவர் காந்திமதிநாதனை அழைத்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

செய்திப்பிரிவு

சென்னை: மதுரை தோப்பூர் காசநோய் மருத்துவமனை சிறந்து விளங்குவதற்கு காரணமான மருத்துவர் காந்திமதிநாதனை தனது இல்லத்துக்கு அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

இதுதொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை அருகே ஆஸ்ட்டின்பட்டியில் 115 ஏக்கரில், 1960-ல் பிப். 12-ம் தேதி அன்றைய முதல்வர் காமராஜரால் அரசு காசநோய் மற்றும் பிற தொற்று நோய்களுக்காக தனித்தன்மை வாய்ந்த நெஞ்சக நோய் மருத்துவமனை திறக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு இந்த மருத்துவமனையின் நிர்வாக அலுவலராகநியமிக்கப்பட்டவர் மருத்துவர் காந்திமதிநாதன். அவரது தன்னலமற்ற தியாக மனப்பான்மையுடன் கூடிய மருத்துவத் தொண்டுகளால் இந்த மருத்துவமனை மிகச்சிறந்த மருத்துவமனையாக வளர்ந்துள்ளது. அவர் கடந்த ஜூன் 30-ம்தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

மருத்துவர் காந்திமதிநாதன் தொண்டுகளால் தோப்பூர் காசநோய் மருத்துவமனை சிறந்துவிளங்குவது அறிந்து பெரிதும் மகிழ்ந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து,நேற்று சென்னையில் உள்ள முதல்வரின் இல்லத்துக்கு காந்திமதிநாதன் தமது குடும்பத்தாருடன் வந்து, முதல்வரை சந்தித்தார். அப்போது அவரது மகத்தான தொண்டுகளைப் போற்றி, பாராட்டி முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.

ஜூலை 1-ம் தேதி (நேற்று) உலக மருத்துவர் தினம் என்பதால், சுகாதாரத்துறையில் சிறந்த தொண்டுகள் புரிந்துள்ள மருத்துவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் மருத்துவர் காந்திமதிநாதன் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி எதிரொலி: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 27-ம் தேதி ‘திரும்பிய பக்கமெல்லாம் பசுமை, தென்றல் காற்று வருட - நோய் தீர்க்கும் சோலையாக மாறிய தோப்பூர் மருத்துவமனை’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. இந்தசெய்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எக்ஸ் வலைதளபதிவில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்தசெய்தி முதல்வரின் கவனதுக்கு சென்றதும், மருத்துவர் காந்திமதிநாதனை அழைத்து முதல்வர் பாராட்டியுள்ளார்.

SCROLL FOR NEXT