சென்னை: மருத்துவத்தில் சிறப்பாக சேவை ஆற்றிய 105 மருத்துவர்களுக்கு விருதுகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி, சுகாதாரத் துறையில் 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 105 சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நேற்றுநடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன், மதுரை தோப்பூர் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வுபெற்ற மருத்துவர் காந்திமதிநாதன் உள்ளிட்ட 105 மருத்துவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி,தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கே.நாராயணசாமி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மருத்துவர்கள் 10 பேருக்கு விருது கொடுப்பார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் மூன்று ஆண்டுகள் விருது வழங்கவில்லை. 30 மருத்துவர்களை தேர்வு செய்து வைத்திருந்தார்கள். அவர்களுக்கு விருது வழங்கவில்லை என்பதை எங்களிடம் சமீபத்தில்தான் தெரிவித்தனர்.
கரோனா காலத்தில் மருத்துவர்கள் மிகசிறப்பாக பணியாற்றினர். திமுகஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளதால் ஆண்டுக்கு 25 வீதம் 75 பேர் மற்றும் புதிதாக 30 பேர் என மொத்தம் 105மருத்துவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
எதிர்கால தேவை என்று கருதி ரூ.3,000 கோடி திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக அமெரிக்கா செல்கிறேன். வரும் 10-ம் தேதி வாஷிங்டனில் உலக வஙகி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறோம். ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.