கோப்புப் படம் 
தமிழகம்

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை: மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்று அரசுமருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக சட்டசபையில் ஜூன் 28-ம்தேதி சுகாதாரத்துறை மானியக்கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட, ரூ.250 கோடியில் குழந்தைகளுக்கான 2 பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை நிறுவப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வரவேற்கிறோம்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதியஉயர்வு மற்றும் கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிடாதது மிகுந்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

அண்டை மாநிலங்களான கர்நாடகா, புதுச்சேரி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும், சுகாதாரத்துறையில் 25-வது இடத்தில்உள்ள பிஹார் போன்ற மாநிலங்களிலும் அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தரப்படுகிறது.

ஆனால், சுகாதாரத் துறையில் முன்னணி மாநிலமாக உள்ள தமிழகத்தில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் அரசு மருத்துவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி(இன்று) டாக்டர்கள் தினத்தையொட்டி, நீண்டகாலமாக வேதனையில் இருக்கும் அரசு மருத்துவர்கள்வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்தும் வகையில் அரசாணை 354-ஐஅமல்படுத்தி அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யாவுக்கு அரசு வேலை வழங்கவேண்டும். அதேநேரம் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் மருத்துவர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT