தமிழகம்

சைதாப்பேட்டையில் வயிற்றுப்போக்கால் பிஹார் சிறுவன் உயிரிழப்பு - குடிநீரில் கழிவுநீர் கலப்பு காரணமா?

செய்திப்பிரிவு

சென்னை: சைதாப்பேட்டையில் வயிற்றுப்போக்கால் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் குடிநீரில் கழிவு நீர் கலக்கப்பட்டதா? என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

சைதாப்பேட்டை அபித் காலனியில் வசிப்பவர் பிஹார் மாநில தொழிலாளி ராஜேஷ்குமார். இவரது மகன் யுவராஜ் (11). 10 நாட்களுக்கு முன்பு பிஹாரில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் கடந்த26-ம் தேதி வாந்தி எடுத்ததாகவும், அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருந்தை உட்கொண்டபின், இயல்பாக இருந்ததாகவும் தெரிகிறது.

ஆனால், மறுநாளும் சிறுவனுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படவே, கிண்டியில் உள்ள கலைஞர்நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அந்த வெளிமாநில தொழிலாளியின் இளையமகள் மீரா குமாரி(7)யும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மாதிரிகள் சேகரிப்பு: ஏற்கெனவே இப்பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதைத் தொடர்ந்து, அப்பகுதியில் குடிநீரின் தரத்தை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் சோதித்து, மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாநகராட்சி சார்பில் அங்கு சிறப்பு மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டு நேற்று அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது பிளீச்சிங் பவுடர், ஓ.ஆர்.எஸ் கரைசல் ஆகியவற்றை அப்பகுதி மக்களிடம் ஆணையர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். மேலும், இப்பகுதியில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ‘டாக்சிசைக்ளின்’ மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதையும், மக்களிடம் மருத்துவப் பணியாளர்கள் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனை நடவடிக்கைகளையும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

இப்பகுதிக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, இப்பகுதியில் தொடர் கண்காணிப்பை மேற்கொள்ளவும், இம்மருத்துவ முகாமை தொடர்ந்து3 நாட்கள் நடத்தவும், அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார். சிறுவன் மரணத்துக்கு குடிநீரில் கழிவுநீர் கலந்ததுதான் காரணமா? என மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சிறுவனின் உடற்கூறு ஆய்வறிக்கை மற்றும் நீர் மாதிரி ஆய்வுகள் வந்த பிறகே விவரம் தெரிய வரும்’ என்றனர்.

சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி: சைதாப்பேட்டை அபித் காலனியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடிநீர் மாதிரிகள், சிறுவனின் வீட்டில் பாத்திரத்தில் இருந்த குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது வந்துள்ள ஆய்வு முடிவில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

கட்டுமான பணியிடத்தில் அவர்கள் அனைவரும் உணவு சாப்பிட்டதாக கூறியுள்ளனர். அது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். நீர் மாதிரி ஆய்வு மற்றும் உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பிறகு, உண்மை காரணம் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பழனிசாமி வலியுறுத்தல்: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது "எக்ஸ்" தள பக்கத்தில் ‘‘சென்னை சைதாப்பேட்டை யில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 11 வயது சிறுவன் உயிரிழந்தசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வாழ்வியலுக்கு மிக அடிப்படையான குடிநீர் சுகாதார முறையில் வழங்கப்படுவதைக் கூட ஒரு அரசால் உறுதிசெய்ய முடியவில்லை என்பது, நிர்வாகச் சீர்கேடு, அரசு இயந்திரம் முழுவதும் புரையோடிப் போயுள்ளதைக் காட்டுகிறது. தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சென்னையில், குடிநீர் சுகாதார முறையில் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண் டும்’’என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT