பொறியியல் கலந்தாய்வு இணைய வழியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது, புதிதாக கர்நாடகாவில் இருந்து வந்து துணைவேந்தராக பொறுப்பேற்று இருப்பவரின் முதல் குழப்ப நடவடிக்கையாக அமைந்திருக்கிறது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு, இதுவரை மாணவர்களின் நேரடி பங்களிப்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வந்ததை திடீரென்று மாற்றி, இந்த வருடத்திலிருந்து இணைய வழியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது, புதிதாக கர்நாடகாவில் இருந்து வந்து துணைவேந்தராக பொறுப்பேற்று இருப்பவரின் முதல் குழப்ப நடவடிக்கையாகவும், தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்கள் மற்றும் தமிழ்வழி பயின்ற மாணவர்களின் நலனுக்கு முற்றிலும் விரோதமாகவும் அமைந்திருக்கிறது.
1.50 லட்சம் மாணவர்களுக்கு மேலான சேர்க்கை முறையில் “ஆன்லைன் விண்ணப்பம்”, “ஆன்லைன் கலந்தாய்வு”, என்றெல்லாம் அறிவித்திருப்பது, கிராமப்புற மாணவர்களை சொல்லொனாத் துயரத்திற்கு உள்ளாக்கி இருப்பது மட்டுமின்றி, ஏற்கனவே ஆன்லைன் விண்ணப்பங்கள் விற்பனை பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை குறைந்துவிட்டது.
“வீட்டிலிருந்தோ அல்லது வேறு எங்கிருந்தோ”, ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருப்பதிலிருந்தே, அனைத்து மாணவ - மாணவிகளிடமும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி இருக்காது என்பது வெளியாகிறது.
ஆனால், அதற்கு மாவட்டத்திற்கு ஒரு சேவை மையத்தை மட்டும் உருவாக்கி உதவிட முடியும் என்று நினைப்பது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏ.டி.எம்.கள் முன்பு நீண்ட க்யூ வரிசையில் காத்திருந்தது போன்ற கசப்பான அனுபவத்தை மாணவ - மாணவியருக்கு ஏற்படுத்தும்.
பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு மாணவ - மாணவியரும் தங்களது மின்னஞ்சல் முகவரியையோ, பெற்றோரின் மின்னஞ்சல் முகவரியையோ கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
கிராமங்களில், குறிப்பாக ஆன்லைன் வசதி இல்லாத குக்கிராமங்களில் உள்ள ஒரு ஏழை மாணவன் பொறியியல் கல்லூரியில் சேர நினைத்தால், அந்த மாணவனால் எப்படி மின்னஞ்சல் முகவரியை கொடுக்க முடியும்? அவர்களுடைய பெற்றோருக்கு எப்படி மின்னஞ்சல் முகவரி இருக்க முடியும்? இந்த அடிப்படை உண்மைகளைக் கூட தெரிந்து கொள்ளாமல் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரும், அதிமுக அரசும் கூட்டணி அமைத்துக் கொண்டு ஆன்லைன் விண்ணப்பம் என்றும் ஆன்லைனிலேயே கலந்தாய்வு என்றும் கிராமப்புற மாணவர்களை வஞ்சிக்கிறது.
இதன்மூலம், தங்களுக்கு வேண்டிய கல்லூரிகளை தேர்வு செய்ய மாணவர்களுக்கு நேரமும் கிடைக்காது. அதற்கான தொழில்நுட்ப வசதியும் கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு தெரிந்திருக்காது.
ஆகவே, இந்த ஆன்லைன் முறை பொறியியல் கல்லூரி சேர்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் ஆபத்து இருக்கிறது. நீட் தேர்வு மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை மத்திய அரசு சிதைப்பதற்கு துணைபோன அதிமுக அரசு, இப்போது தலைவர் கலைஞர் அவர்களால் நுழைவுத்தேர்வு ரத்துசெய்யப்பட்ட பலனை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மாணவர்களின் பொறியியல் கல்வியையும் சிதைக்க முற்படுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுமட்டுமின்றி, முதல்நிலை பட்டதாரிகளாக பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்புவோருக்கும் இந்த ஆன்லைன் விண்ணப்பமுறை ஆபத்தாகவே இருக்கும். ஆகவே, ஆன்லைன் விண்ணப்ப முறை மற்றும் ஆன்லைனிலேயே மே மூன்றாம் தேதி முதல் 30 ஆம் தேதிவரை கலந்தாய்வு நடத்தினாலும், தமிழக மாணவ – மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் விருப்பம் மற்றும் வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நேரடியாக விண்ணப்பங்களை விற்பது மற்றும் நேரடி கலந்தாய்வும் அனுமதிக்கப்பட, அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நேரடி கலந்தாய்வு தவிர, ஆன்லைன் கலந்தாய்வு தொடர வேண்டும் என்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒன்றிய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் சேவை மையங்களை துவங்கி, அவற்றின் மூலம் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் மற்றும் தமிழ்வழி பயின்ற மாணவர்களின் பொறியியல் கனவு எக்காரணம் கொண்டும் சிதைந்து விடாமல் பாதுகாத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.