திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 28) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பி. பெரும்படையார், அயன்சிங்கம்பட்டியை சேர்ந்த சொரிமுத்து ஆகியோர் பேசுகையில், “மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் 90 ஆண்டுகளுக்கு மேலாக 4 தலைமுறையாக தோட்டத் தொழிலாளர்களாக வேலை செய்துவந்த ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் எவ்வித சாதிய பாகுபாடும் இல்லாமல் ஒருதாய் பிள்ளைகள்போல் கலாச்சார மரபுப்படி வாழ்ந்து வருகிறார்கள்.
தற்போது குத்தகை காலம் முடியவுள்ள நிலையில் அவர்களை கட்டாயமாக வெளியேற்றுவது, அவர்களது எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும். அவர்களை மனதளவில் ஊனப்படுத்தும். எனவே, அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்தவும், வெளியேறிய தொழிலாளர்களின் குடும்பங்களை மீள் குடியமர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர், “மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் 540 தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தமிழக முதல்வரும் உறுதி அளித்துள்ளார். பெரும்பாலான தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுக்கு முன்வந்துள்ளனர். விருப்ப ஓய்வை ரத்து செய்ய வேண்டுமா? என்று அவர்களிடம் கேட்கும்போது, அதற்கு அவர்கள் தயாராக இல்லை. அதிகாரிகள் குழுவினர் வாரத்துக்கு இருமுறை அங்கு சென்று, சட்டப்படி அவர்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறார்கள்” என்றார்.