சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவுநீர்ப்பாதைக்கு 30 மீட்டர் சுற்றளவில் உள்ள தனியார் தெருக்கள், வளாகங்கள் கழிவுநீர் இணைப்பு பெறுவதை கட்டாயமாக்கி சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவையில் இன்று, அமைச்சர் கே.என்.நேரு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் சட்டத்தை திருத்தி தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது: தனியார் வளாகம் அல்லது ஒரு தனியார் தெருவின் மிக அருகில் உள்ள இடத்தில் இருந்து 30 மீட்டர் தூரத்துக்குள், வாரியத்தின் கழிவுநீர்ப்பாதை இருக்குமானால், அந்த வளாகத்தின் உரிமையயாளர் அல்லது குடியிருப்பவர், தனியார் தெருவின் உரிமையாளர், கழிவுநீரை வாரியத்தின் கழிவுநீர்ப்பாதையில் வெளியேற்றுவதற்காக இணைப்பு வழங்க அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
அந்த விண்ணப்பம் பெறப்பட்டதன் பேரில், அந்த வளாக உரிமையளர், குடியிருப்பவர் அல்லது தெருவின் உரிமையாளர், கழிவுநீர் இணைப்புக்கு வாரியத்துக்கு ஏற்படும் செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும், அவர்கள் வகுக்கும் நிபந்தகைள், தேவைகளுக்கு இணங்கி நடத்தல் வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு கழிவுநீர் இணைப்பு வழங்கப்படும்.
மேலும், வாரியத்தின் கழிவுநீர்ப்பாதையிலிருந்து 30 மீட்டர் தூரத்துக்குள் உள்ள வளாகம், தனியார் தெரு உரிமையாளர் அல்லது குடியிருப்பவர் எவரும் கழிவுநீர்த் தொட்டி, கழிவுநீர்க் குட்டை, கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் போன்ற கழிவுநீர் அகற்றுதலுக்கான பிற வழிமுறை எவற்றையும் தொடரக்கூடாது.
இதை மீறினால், 6 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும் ஒரு கால அளவுக்கான சிறை தண்டனை, அல்லது ரூ.10 ஆயிரம் வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். தொடர்ந்து மீறினால், ஒவ்வொரு நாளுக்கும் ரூ.500 வரை நீட்டிக்கப்படும் கூடுதல் தண்டத் தொகை விதிக்கப்பட வேண்டும். இந்ததண்டனைகள் அந்தந்த பகுதியின் செயற்பொறியாளரால் நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் மேல்முறையீடு என்பது, உத்தரவு பெறப்பட்டு 30 நாட்களுக்குள் மேலாண்மை இயக்குனருக்கு அனுப்பப்பட வேண்டும்.
மேல் முறையீட்டாளர் உரிய கால அளவுக்குள் மேல் முறையீடு செய்யப்படாததற்கு போதிய காரணம் உள்ளது என்று மேலாண்மை இயக்குனர் கருதினால், 30 நாட்களுக்குப்பின் செய்யப்பட்ட மேல்முறையீட்டையும் ஏற்கலாம். மேல்முறையீடு தொடர்பாக 60 நாட்களுக்குள் தீர்வு அளிக்க வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.