தமிழகம்

தமிழகத்தில் ரூ.20 கோடியில் 10 புதிய கைத்தறி குழுமங்கள் உருவாக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்கள் அதிகம் உள்ள இடங்களில் 10 புதிய கைத்தறி குழுமங்கள் ரூ.20 கோடி திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் கைத்தறி, துணி நூல் துறைஅமைச்சர் காந்தி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கைத்தறி, துணி நூல், கதர் துறை தொடர்பாக அமைச்சர் ஆர்.காந்தி நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழகத்தில் உள்ள 1,114 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு, ஆண்டுதோறும் கூலி உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு கூலியில் 10% அகவிலைப்படி உயர்த்தி தரப்படும்.

கைத்தறி ஆதரவு திட்டத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு இனத்தின்கீழ், 3,000 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.3 கோடியில் தறி, உபகரணங்கள் வழங்கப்படும். கைத்தறி துணிகள் விற்பனையை அதிகரிக்க, சென்னை தீவுத்திடலில் ஒரு தேசிய அளவிலான கைத்தறி கண்காட்சி ரூ.2 கோடி செலவிலும், 4 மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சிகள் ரூ.1.20 கோடி செலவிலும் நடத்தப்படும்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.1 கோடி திட்ட மதிப்பீட்டில் பாவு ஓடுதல், கஞ்சி தோய்த்தல் இயந்திரங்கள் அமைக்கப்படும்.

கைத்தறி நெசவாளர்கள் அதிகம் உள்ள இடங்களில் 10 புதியகைத்தறி குழுமங்கள் ரூ.20 கோடிதிட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்படும். இதன்மூலம், 2,000 கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில், தறிக்கூடங்கள் அமைத்தல், மேம்படுத்தப்பட்ட தறி, உபகரணங்கள் வழங்குதல் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும்.

வேலூர், நாகர்கோவில் பகுதிகளில் தேசிய கைத்தறி வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.1.50 கோடியில் 2 சாயச் சாலைகள் அமைக்கப்படும். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ரூ.66 லட்சத்தில் புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் அமைக்கப்படும் என்பது உட்பட 22 அறிவிப்புகளை அமைச்சர் காந்தி வெளியிட்டார்.

SCROLL FOR NEXT