படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

வீட்டில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு ‘பாஸ்டேக்’ பிடித்தம்: மதுரையில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை வண்டியூர் டோல்கேட்டில் சர்வர் பழுதால் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு "பாஸ்டேக்" கட்டணம் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், கடந்த 2 நாட்களாக இந்த டோல்கேட் வழியாக செல்லும் வாகனங்களுக்கு இரு மடங்கு "பாஸ்டேக்" டோல்கேட் கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது.

மதுரை - திருநெல்வேலி நான்குவழிச் சாலையில் வண்டியூர், சிந்தாமணி, வலையங்குளம், கப்பலூர், சாத்தூர், கயத்தார் ஆகிய இடங்களில் டோல்கேட்டுகள் உள்ளன. வண்டியூர், சிந்தாமணி, வலையங்குளம் ஆகிய டோல்கேட்டுகள் மாநில நெடுஞ்சாலைத்துறையின் தமிழ்நாடு சாலை கட்டமைப்பு திட்டம்-2 சார்பில் நிறுவப்பட்டுள்ளன. ஒரே சாலையில் இத்தனை டோல்கேட்களா என்ற அடிப்படையில் பல்வேறு போராட்டங்கள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடந்த பல ஆண்டாக நடத்தி வருகிறார்கள். இதில், தேசிய நெடுஞ்சாலை நிர்ணயித்த 60 கி.மீ., தொலைக்கு ஒரு டோல்கேட் என்ற விதிமுறை மதுரை மாவட்டத்தில் பகிரங்கமாகவே மீறப்பட்டுள்ளன.

ஆனால், மத்திய, மாநில அரசுகள், விதிமுறை மீறி அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்டுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், மதுரை டோல்கேட்டுகளில் அதன் ஊழியர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பிரச்சனை ஏற்பட்டு சட்டம், ஓழுங்கு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை வண்டியூர் "ரிங்" ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்டில் கடந்த 2 நாட்களாக அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு இரு மடங்கு "பாஸ்டேக்" டோல்கேட் கட்டணம் வாகன ஓட்டிகள் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.

மேலும், வீட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கும் "பாஸ்டேக்" டோல்கேட் கட்டணம் வங்கி கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட குறுஞ்செய்தி வந்ததைப்பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். அதனால், கடந்த 2 நாட்களாக வாகன ஓட்டிகளுக்கும், வண்டியூர் டோல்கேட் ஊழியர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. வீட்டில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு "பாஸ்டேக்" டோல்கேட் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்ட வாகன ஒட்டிகள், யாரிடம் முறையிடுவது எனத்தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

ஏற்கெனவே விதிமுறை மீறி அமைக்கப்பட்ட டோல்கேட், கூடுதலாக நிர்ணயிக்கப்படும் பாஸ்டேக் கட்டணம் போன்றவற்றால் வாகன ஓட்டிகள், மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை எடுத்து செல்வதற்கே அச்சமடைந்துள்ளனர். இந்த சூழலில், வாகனங்களை எடுக்காமலே "பாஸ்டேக்" கட்டணம் பிடித்தம், இரு மடங்கு "பாஸ்டேக்" கட்ணம் போன்றவற்றால் வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தவறுதலாக பிடித்தம் செய்த பணம் திருப்பி வழங்கப்படும்: இது குறித்து வண்டியூர் டோல்கேட்டை நிர்வகிக்கும் மாநில நெடுஞ்சாலைத் துறையின் தமிழ்நாடு சாலை கட்டமைப்பு திட்டம்-2 அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "வண்டியூர் டோல்கேட்டை நிர்வகிக்கும் கம்பெனி, அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக சிந்தாமணி, வலையங்குளம் டோல்கேட்டுகளை நிர்விக்கும் கம்பெனி, வண்டியூர் டோல்கேட்டை நிர்வகிக்க உள்ளனர்.

இந்த நிர்வாக மாற்றத்தால் சர்வரில் கடந்த 2 நாட்களாக பழுது ஏற்பட்டுள்ளது. அந்த பழுதால் இதுபோன்ற டோல்கேட் பாஸ்டேக் கட்டணம் பிடித்தம் குளறுபடிகள் தொடர்கிறது. பாதிக்கப்பட்ட வாகன ஒட்டடிகளுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் கூடுதலாக, தவறுதலாக பிடித்தம் செய்த பணம் சேர்க்கப்படும். அந்த பெறாதவர்கள், புகார் செய்தால் வழங்கப்படும்," என்றார்.

SCROLL FOR NEXT