கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய உயிரிழப்புகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா சந்தித்து ஆறுதல் கூறினார். | படம்: எஸ்.எஸ்.குமார் 
தமிழகம்

“அனைத்து உதவிகளும் கிடைக்க பரிந்துரை” - கள்ளக்குறிச்சியில் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையர் உறுதி

செ.ஞானபிரகாஷ்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைக்கும் என்று ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா கூறியுள்ளார்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா, உறுப்பினர்கள் வட்டேபள்ளி ராம்சந்தர், லவ்குஷ்குமார் ஆகியோர் கள்ளக்குறிச்சியில் கருணாபுரத்தில், மெத்தனால் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் புதன்கிழமை நேரில் விசாரணை நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைத்திட இவ்வாணையம் பரிந்துரை செய்யும் என ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா தெரிவித்தார். தொடர்ந்து, இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் ஆணைய குழுவினர் சந்தித்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், உடல் நலம் பாதிக்கப்பட்டோர்க்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்துகள் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்டவர்களிடம் இதுபோன்று கள்ளச்சாராயம், மது அருந்துவதை தவிர்த்திடுமாறு அவர்கள் அறிவுறுத்தினர். பின்னர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில், அரசு உயர் அலுவலர்கள், காவல் துறை உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.

அப்போது, கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், தற்பொழுது சிகிச்சையில் உள்ளவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பாதிக்கப்பட்டோருக்கு அரசால் வழங்கப்படும் நிவாரண உதவிகள், மெத்தனால் பயன்பாடுகளைக் கண்காணித்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதலை தடுத்தல், பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் மற்றும் இச்சம்பவத்தை ஏற்படுத்திய நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விவரங்கள், இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் விவரம், தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விசாரித்து ஆலோசனை நடத்தினர்.

SCROLL FOR NEXT